பக்கம் எண் :


72 திருப்புகழ் விரிவுரை

 

இரும்பு அவல் போன்ற கடினமானது திருப்புகழ் என்று கூறுவாரும் உளர்.

நெடுநாள் கெடாமல் நின்று யாத்திரையில் உதவுவது அவல். அதுபோன்றது திருப்புகழ்.

விருப்பொடு படிப்பவர் இடுக்கினையறுத்திடும்:-

திருப்புகழை அன்போடு ஓதுபவர்களின் துன்பங்களை, அத்திருப்புகழே அழித்து ஒழிக்கும். அத்துணை மகிமை வாய்ந்தது எம்பிரானுடைய திருப்புகழ்.

எனவோதும்.........அறியாதே:-

திருப்புகழின் பெருமையைக் கூறுகின்றவர்கள்-முத்தமிழில் வல்லவர்கள்- ஆசு கவி, மதுரகவி, சித்ரகவி, வித்தாரகவி என்ற நான்குவகைக் கவிகளில் வல்லவர்கள். முருகனுடைய நாமத்தைத் தரித்தும் நினைத்தும் உரைத்தும் வருகின்ற அந்த அடியார்களை அணுகும் தன்மையறியாமல் கெடுகின்றேன் என்கின்றார் அடிகளார்.

தனத்தினால் முகத்தினில் மனத்திலுருக்கிடும்:-

விலைமகளிர் தமது தனங்களாலும் அழகிய முகவசீகரத்தாலும் இளைஞர்களுடைய உள்ளத்தை உருக்குவார்கள்.

சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ:-

ஆடவரை வசஞ்செய்ய வல்ல அம்மகளிருடைய மயக்கமாகிய படுகுழியில் விழுந்து கெடுவது கூடாது.

கருப்புவில்.........எரித்தவர்:-

மன்மதன் சிவபெருமானுடைய மோனநிலையைக் கலைக்கும் பொருட்டு கயிலையில் சென்று தனது வில்லை வளைத்து ஒளிந்திருந்து மலர்க்கனைகளைச் சொரிந்தான்.

நெருப்புக் கண்ணால் அக்காமனை ஒரு கணத்தினில் சிவபெருமான் எரித்து நீறாக்கினார்.

ஆசையை அறிவால் அடக்கவேணும். அறிவுக் கண் நெற்றிக்கண். அதிலிருந்து வந்த நெருப்பு ஞானவொளி. அதனால் ஆசையை உண்டாக்கும் அதிதேவதையை அழித்துவிட்டார்.

கயிலாயப் பொருப்பினிலிருப்பவர்:-

வெள்ளி மலையில் வீற்றிருப்பவர் சிவபெருமான் அது தூய வெமையானது. தூய்மையில்தான் இறைவன் இருப்பான்.