நீரினுள்ளும், மண்ணினுள்ளும், சமயவாதம் புரிகின்ற எவரிடத்திலும் காணக்கிடையாத ஒப்பற்ற ஞான ஒளியினுள்ளும்,, நான்கு வேதங்களின் முடிவிலும், ஊடாடுகின்றதும், துரியமாய் நிற்பதும், துன்பங் கடந்த நிலையில் உள்ளதுமான சிவரூபத்தை, பேராசையும் குற்றமும் நீங்காத மூடனாகிய அடியேன் அடைவதற்கு உரிய வழிஎதுவோ? அந்த உபதேச மொழியை உபதேசித்து அருளுவீராக. விரிவுரை இத் திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் முருகனிடம் உபதேசம் புரியுமாறு வேண்டுகின்றார். உடலினூடு.......நால்வேத முடியினூடும் ஊடாடும்:- சிவ ரூபமானது மண் முதலான ஐம்பெரும் பூதங்களினுள்ளும், உயிர் உணர்விலும், அறிவினுள்ளும் கலந்திருக்கின்றது. வாதாடுமொருவரொடு மேவாத தனி ஞானச்சுடர்:- கல்வி பயில்வது மனம் அடங்குவதற்காகவேயாகும். அங்ஙனம் அடக்கம் பெறாது, கல்வி பயின்று, “என் சமயம் பெரியது, என் சமயம் பெரியது” என்று வீணே தர்க்கம் புரிந்து வாணாளை வீணாளாக்கும் சமயவாதிகளின் அறிவில் ஞானஒளி வீசாது. துரியம்:- சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்றையும் கடந்தது துரியம். அத் துரிய நிலையில் உணரப்படுவது சிவ ரூபம். “துரியநிலை யேகண்ட முத்தரித யாகமலம் அதனில் விளையாநின்ற அற்புத போத சுக சுயபடிகம்” -(சுருதிமுடி) திருப்புகழ் ஆகுலாதீத சிவரூபம்:- ஆகுலம்-துன்பம்; அதீதம்-அப்பாற்பட்டது. சிவரூபமானது துன்பத்திற்கு அப்பாற்பட்டது. சிவனருள் பெற்றவர்க்கே துன்பம் கிடையாது. ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்கின்றார் அப்பர் பெருமான் தொலைவிலாத பேராசை:- பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் மனதில் எழும். |