பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 79

 

கடவுளுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன் ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.

சங்கிலி பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டுள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால் அதன் நீளம் குறையும். அதுபோல் பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.

  “ஆசா நிகளம் துகளாயின பின்
   பேசா அநுபூதி பிறந்ததுவே”
                                           -கந்தரநுபூதி

துரிசறாத வோர் பேதை:-

துரிசு=குற்றம். ஆசையால் கோபமும், கோபத்தால் மயக்கமும் வரும். காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும் நீங்கினல்தான் பிறவி நீங்கும்.

“காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
   நாமம் கெடக்கெடும் நோய்”
                                                 -திருக்குறள்.

பேதை=அறிவில்லாதவன், மேதையில்லாதவன் பேதை; பேதை வாதையடைவான்.

தொடுமுபாயம் ஏதோ சொலருள்வாயே:-

மேலே கூறிய சிவரூபத்தை யடைகின்ற வழி யாது? அதை உபதேசித்தருளும்.

மடலறாத வாரீச,,,,,,,,,,,,,,,,,,,,மலர்வாவி:-

இந மூன்று அடிகளில் திருத்தணியில் தாமரைக் குளத்தில் வாழும் வாளை மீனின் ஆற்றல் கூறப்படுகின்றது.

திருத்தணியில் குளத்தில் வாழுகின்ற வாளை மீன் மதகு வழியே சென்று, தாமரைக் காட்டை அழித்து, மதகுகளை உடைத்தும், வரால் மீன்களை விரட்டியும், கடலில் சென்று பெரிய மகர மீன்களைத் தோல்வியுறச் செய்தும், ஆற்றின் வழியே மீண்டு முன்பிருந்த குளத்தில் வந்து சேருமாம். இத்துணை வலிமை வாளை மீனுக்கு உண்டு என்று குறிப்பிடுகின்றார்.