பக்கம் எண் :


8 திருப்புகழ் விரிவுரை

 

விளங்கும் தனங்களையுடைய வள்ளி நாயகியை, சிறந்த தினைப்புனத்தில் வைத்துத் தழுவி மணஞ் செய்து கொண்டு, திருக்கயிலாய மலையில் எழுந்தருளியுள்ள தலைவரே! விரிந்த சடைமுடியில் கங்காதேவி யிருக்குமாறு செய்து, மானையேந்திய சிவபெருமான் மகிழும் பெருமிதமுடையவரே! சிரித்து மனத்தை உருக்கி, விழித்துப் பார்த்து அச்சத்தைத் தந்து, அன்புள்ளவரைப்போல் நடித்து, விதம் விதமாக அதிக மோகத்தைத் தருகின்ற சாமர்த்தியத்தைக் காட்டி, முகத்தை மினுக்கி, நலமிகுந்த படுக்கைத் தலத்தில் தழிவி, இனிய பேச்சினாலும், திகைக்கச் செய்து அவர்கள் கேட்ட வரத்தின்படி கையில் கிடைத்த பொருள்களைத் திரட்டிக் கொணர்ந்து வரும்படிச் செய்கின்ற திருட்டுத்தனமான கொங்கையையுடைய பெண்களின் மருட்சியைத் தரும் ஆசை வலையிலும், காமக் கலைக்குள்ளும் அடியே விழக்கடவேனோ?

விரிவுரை

நகைத்து:-

பொதுமகளிர், ஆடவரைக் கண்டு காரணம் இன்றியே முல்லையரும்பு போன்ற பற்கள் சிறிது தோன்றப் புன்னகை புரிவர். அந்நகை விடம்போல் ஆடவரை மயக்கும்.

உருக்கி:-

ஆடவருடைய திண்ணிய மனத்தை உருக்கி விடுவார்கள்.

“அங்கார ஸ்த்ருஸீநாரீ க்ருதகும்ப ஸம: புமாந்”

“பெண்கள் நெருப்புக்குச் சமம். ஆண்கள் நெய்க் குடத்திற்குச் சமம்” என்று நாரத பரிவ்ராஜகம் என்ற உபநிடதம் கூறுகின்றது. (நெருப்பு அருகில் உள்ள குடத்தில் உள்ள நெய் உருகும்-நெய் மனத்திற்கு உவமை).

விழித்து மிரட்டி:-

தம்மை விரும்பிய ஆடவர்களை அம்மகளிர் கண்களை உருட்டிப் பார்ப்பர். அப் பார்வையால் ஆண்கள் “இவள் நம்மை வெறுத்து விடுவாளோ” என்று எண்ணி அஞ்சுவர்.

நடித்து விதத்தி லதிமோகம் நடத்து சமத்தி:-

பொருளையே விரும்பி, உள்ளத்தில் அன்பு சிறிதேனும் இன்றி, ஆழ்கடல் போன்ற அன்புள்ளாரைப் போல் நடிப்பார்கள்.