வீரவாகு தேவர் தூது சென்று வழியில் அரக்கர்களைக்கொன்று கடல் நடுவில் உள்ள வீரமகேந்திரஞ் சென்று, போர் புரிந்து வெற்றியுடன் மீண்டதையும் இது குறிப்பினால் புலப்படுத்துகின்றது. கடவுள் நீல மாறாத தணிகை:- திருத்தணிகை மலைமீது தெற்கு ரதவீதியின் தென்புறத்திலிந்திர நீல சுனை இன்றும் இருக்கின்றது, அச்சுனையில் இந்திரன் தேவலோகத்து நீலோற்பலக் கொடியை வைத்து வளர்த்தான் அங்கு காலை, உச்சி, மாலை என்ற முப்போதும் தப்பாது மூன்று மலர்கள் மலரும். அதனை எடுத்து மூன்று வேலைகளிலும் இந்திரன் கந்தவேளை வழிபட்டான் செங்கழுநீர் மலரும் அதில் மலர்ந்தது. அதனால் அந்த மலை கல்லாரகிரி எனப் பெயர் பெற்றது. ‘கன் மலிந்த கழுநீர்க் குன்றம்’ என்று அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார்.நீலோற்பலம்மலர்வதால் இது நீலகிரி எனப் பெயர் பெற்றது. “நீலகிரி மருவு குருபதி” -சீர்பாதவகுப்பு “அனவரத நீலமலர் முத்தெறி சுனைப் புனலில் அருவிகுதிபாய்தரு செருத்தணி” -பூதவேதாளவகுப்பு “நீள்சுனை தினமும் உற்பலம் மலர் திருத்தணி” -ஞானவேழவகுப்பு “இந்த்ர நீலச் சிலம்பினன்” -கந்தரந்தாதி சேர்ப்பது மாலய நீலோற்பலகிரி” -கந்தரந்தாதி காலைப் போதினில் ஒருமலர்; கதிர் முதிர் உச்சி வேலைப் போதினில் ஒருமலர்; விண்ணெலாம் இருள்ழூழ் மாலப் போதினில் ஒருமலர்; ஆகஇவ் வரைமேல் நீலப் போதுமுன்று ஒழிவின்றி நிற்றலும் மலரும். கருணை மேருவே:- முருகவேள் கருணையில் மேருமலை போல் உயர்ந்தவர். மேருவரையின் மேம்பட்ட தவத்தன் என்று சுந்தரரைச் சிவபெருமான் குறிப்பிடுகின்றார். கருத்துரை தணிகை நாயகா! ஆசையற்று அடியேன் சிவரூபத்தைப் பெற உபதேசித்தருள். |