உடையவர்க ளேவ ரெவர்களென நாடி உளமகிழ ஆக கவிபாடி உமதுபுகழ் மேரு கிரியளவு மான தெனவுரமு மான மொழிபேசி நடைபழகி மீள வறியவர்கள் நாளை நடவுமென வாடி முகம்வேறாய் நலியுமுன மேயு னருனவொளி வீசு நளினஇரு பாத மருள்வாயே விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் விகிர்தர்பர யோகர் நிலவோடே விளைவுசிறு பூளை நகுதலையொ டாறு விடவரவு சூடு மதிபாரச் சடையிறைவர் காண உமைமகிழ ஞான தளர்நடையி டாமுன் வருவோனே தவமலரு நீல மலர்சுனைய நாதி தணிமலையு லாவு பெருமாளே. பதவுரை விடை கொளுவு பாகர்=இடபவாகனத்தைச் செலுத்துபவர்; விமலர்=மலம் இல்லாதவர்; திரி சூலர்=முத்தலைச் சூலத்தையுடையவர்; விகிர்தர்=உயர்ந்தவர்; பரயோகர்=மேலான யோகத்தினர், நிலவோடே=சந்திரனோடு; விளவு=விளாமரத்தின் இளந்தளிர்; சிறு பூளை=சிறிய பூளைச் செடியின் மலர், நகு தலையொடு=பல்லோடு கூடிய வெண்தலை, ஆறு=கங்கையாறு, விட அரவு=விடத்துடன் கூடிய பாம்பு, சூடும்= இவைகளைத் தரித்துள்ள, அதிபார சடை இறைவர் காண=அதிகபாரமுள்ள சடை முடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும், உமை மகிழ=உமாதேவியார் பார்த்து மகிழவும், ஞான தளர் நடைஇடா முன் வருவோனே=ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன் வருபவரே! தவமலரும்=மிகுதியாக மலர்கின்ற, நீலமலர் சுனை= நீலோற்பலச் சுனையுடையதும், அநாதி=ஆதியில்லாததுமாகிய, தணிமலை உலாவு= திருத்தணிகை மலையின் மீது உலாவுகின்ற, பெருமாளே=பெருமையில் மிகுந்தவரே! உடையவர்கள்=செல்வம் படைத்தவர்கள், ஏவர் எவர்கள் என நாடி=எவர்கள் எவர்கள் என்று தேடி, உளமகிழ=அவர்கள் மனம் மகிழும் பொருட்டு, ஆசு கவி பாடி=அவர்கள் மீது ஆசு கவிகளைப் பாடியும், உமது புகழ் மேருகிரி அளவும் ஆனது என=உங்களுடைய புகழ் மேரு கிரியின் அளவு போல் உயர்ந்தது என்று கூறியும், உரமும் ஆன மொழி பேசி=வலிமையான துதி மொழிகளைப் பேசியும், நடை பழகி= |