நடந்து நடந்து பழகியும், வறியவர்கள் மீள=தரித்திரர்களாகவே மீளும்படி, நாளை நடவம் என=அச்செல்வர்கள், “நாளைக்கு வா, நாளைக்கு வா” என்றே கூற, வாடி முகம் வேறாய்=அதனால் அகம் வாடி முகம் களைமாறிச் சோர்ந்து, நலியும் முனமே= வருந்து முன்னதாகவே, உன் அருண ஒளிவீசும்=உமது சிவந்த வொளி வீசுகின்ற, நளின இருபாதம் அருள்வாயே=தாமரை போன்ற இரு பாதங்களையும் அருள்புரிவீராக. பொழிப்புரை இடபவாகனத்தைச் செலுத்துபவரும், மலமில்லாதவரும், முத்தலைச் சூலத்தை யேந்தியவரும், உயர்ந்தவரும், பரமயோகியும், சந்திரன், விளவின் இலை, சிறிய பூளை மலர், பல்லுடன் கூடிய வெண்தலை, கங்கையாறு, நச்சுப்பாம்பு, இவைகளைத் தரித்துள்ள மிகுந்த பாரமான சடை முடியுடையவருமாகிய சிவபெருமான் கண்டு களிக்குமாறும், உமையம்மையார் பார்த்து மகிழுமாறும் அவர்களது திருமுன்னே, ஞானத்தளர் நடையிட்டு வருகின்றவரே! மிகுதியாக நீலோற்பலமலர் மலர்கின்றதும், தொடக்கம் இல்லாததுமான திருத்தணிகை மலையின் மீது உலாவுகின்ற பெருமிதம் உடையவரே! செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள் என்று தேடிக்கொண்டு போய், அவர்கள் மனம் மகிழும்படி, ஆசு கவிகள் பாடியும், உங்களது புகழ் மேருகிரிபோல் அளவில்லாதது என்று வலிமையான துதிமொழிகளைக் கூறியும், ஓயாது நடந்து நடந்து சென்றும், பழையபடியே தரித்திரர்களாகவே வரும்படி “நாளை வா, நாளை வா” என்று அத் தனவந்தர் கூற, அதனால் அகமும் முகமும்வாடி வருந்துதற்கு முன்னரேயே, சிவந்தவொளி வீசுகின்ற தாமரை போன்ற உமது திருவடிகளைத் தந்தருளுவீர். விரிவுரை உடையவர்க ளேவ ரெவர்களென நாடி:- தமிழ் படித்த புலவர்களில் பலர் தமிழுக்குத் தலவனான இறைவனைப் பாடாமல், கேவலம் அழிகின்ற செல்வம் படைத்த மனிதர்களைப் பாடித் திரிந்தார்கள். காமதேனுவின் பாலைக் கமரில் (நில வெடிப்பில்) கொட்டுவதுபோல் அரிய தமிழை அற்பர்களிடம் கொட்டி அலைவது பாவம்; இந்த அவல நிலையைக் குறித்து அருணகிரி சுவாமிகள் இத்திருப்புகழில் இரங்கிக் கூறியருளுகின்றார்கள். தேனை வண்டுகள் நாடித் தேடிச் செல்வதுபோல், புலவர்கள் பெருந்தனவந்தர்கள் எவர்கள் எவர்கள் என நாடித் தேடிச் செல்வார்கள். |