பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார் இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. -திருஞானசம்பந்தர். உன் அருணவொளி வீசு நளின இருபாத மருள்வாயே:- முருகப்பெருமானுடைய திருவடிகள் ஞானமேயாகும். ஞானத்தின் ஒளி செம்மையானது. ஞானப் பிரகாசம் என்பார்கள். “வள்ளல் தொழு ஞானக் கழலோனே” -(துள்ளுமதவேள்) திருப்புகழ். என்று வரும் திருப்புகழ் அடியாலுங் காண்க. தாமரை மலரில் தேன் துளிப்பதுபோல், முருகப் பெருமானுடைய திருவடிகளில் கருணை துளிர்க்கின்றது. “கருணை கூர்ப்பன் கழல்களர்ப்பன காலமேல் வீழேன்” -(சுவடு கோத்தெழு) திருப்புகழ். விடைகொளவு பாகர்:- உலகமெல்லாம் அழிந்தபோது அறம் ஒன்று மட்டும் அழியாது விடை வடிவாகச் சென்று சிவபெருமானை அடைந்தது. இறைவன் அதன்மீது ஆரோகணித்தருளினார். அகில உலகங்களையும் தாங்கும் சிவபெருமானை அறந் தாங்குகின்றது. தரிப்பது (தாங்குவது), தர்மன் (அறம்); பாகன்-செலுத்துபவன். தேர்ப்பாகன் என்ற சொல்லாட்சியாலும் உணர்க. விடையைச் செலுத்துபவன் விடைப்பாகன் “மெய்யா விமலா விடைப்பாகா” -சிவபுராணம் (திருவாசகம்) விமலர்:- செம்புக்குந் தங்கத்துக்கும் என்ன வேற்றுமை? களிம்பு ஒன்றுதான் களிம்பு உள்ளது செம்பு; இல்லாதது தங்கம். அதுபோல் சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள வேற்றுமை யாது? மலம் ஒன்றுதான் மலம் உள்ளவன் சீவன். மலம் இல்லாதவன் சிவன். அநாதிமல பெத்தன்-ஆன்மா, அநாதிமல முத்தன்-இறைவன். எனவே, ஆன்மா-சமலன். இறைவன்-விமலன். |