திரிசூலர்:- ‘சிவபெருமான் திருக்கரத்தில் திருசூலம் விளங்கும். அது இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மூன்று சக்திகளைக் குறிக்கும். விகிர்தர்:- விகிர்தர்-உயர்ந்தவர். எல்லாத் தேவர்கட்கும் சிறந்தவர் சிவமூர்த்தி ஒருவரேயாவர். தேவதேவர், மகாதேவர். பரயோகர்:- சிவபெருமான் சிறந்த யோகீச்சுரர்; “பரமனே பரமயோகீ” என்று அப்பர் பெருமானும், “மறைபாடும் பரமயோகீ” என்று திருஞானசம்பந்தரும் கூறுகின்றார்கள். “பற்றிலார்க்கே வீடருள் பரமயோகீ” -திருவிளையாடற்புராணம். சிறுபூளை:- பூளைப்பூ சிவபெருமானுக்கு உகந்தது. மூளும் வெஞ்சினத் தருந்தவன் முனிந்தெரி விழிப்பப் பூளை சூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல ஆளு மைந்தரா றயுதருஞ் சாம்பரா யவிர்ந்தார் கோவிகண்ட நல் வேந்தனுக் குரைத்தனாவேய்கள் -கம்பராமாயணம். நகுதலை:- சிவபெருமான் அநேக பிரம சிரங்களை மாலையாக அணிந்திருக்கின்றார். அத்தலைகள் பல்லுடன் கூடியவை. அவை அகங்காரத்தால் கெட்டோம் என்று சிரிப்பது போல் இருக்கும். “நான் சிருட்டிக் கர்த்தா” என்று எண்ணித் தருக்குற்றான் பிரமன். அவன் தலையை நகத்தால் கிள்ளியருளினார் சிவனார். எத்தனையோ பிரமகற்பங்கள். கற்பங்கள் தோறும் வந்த பிரமாக்களின் சிரங்களை மாலையாகக் கோர்த்து அணிந்திருக்கின்றார். அதைக் கண்டவர் அகங்காரங் கொள்ளாதிருக்கும் பொருட்டு என்க. அதிபாரச் சடையிறைவர்:- இறைவனுடைய சடைமுடி அப்பெருமானுடைய துறவையும், இறைமைத் தன்மையையுங் குறிக்கின்றது. |