பக்கம் எண் :


88 திருப்புகழ் விரிவுரை

 

சடைமுடியில் உள்ள கங்காதேவிக்கு குமாரரே! மெல்ல விருப்பம் பற்றி வளர்ந்த வள்ளிமலை மீது முதிர்ந்த நேயம் கொண்டவரே! சூழ்ந்துள்ள குறவர்கட்குத் தலைவரே! மயக்கத்தைச் செய்யும் கிரவுஞ்ச மலையை உருவும்படி வெப்பமாகிய வேலைச் சுழற்றி விடுத்த கரத்தினரே! அன்பு வைத்த இலக்குமி தேவிக்கு மருகரே! தெய்வத் தன்மையுடைய விநாயகருக்கு இளையவரே! ஐராவத யானைக்கு அரசரே! தெய்வயானையம்மைக்கு இனியவரே! பெருமிதம் உடையவரே! பிறவித் துன்பத்தினின்றும் அடியேன் உய்யும்பொருட்டு ஞான நெறியை எந்நாளும் கைவிடாது பற்றி உள்ள வேத நூல்களை உணர்வுடன் ஓதி, எனக்குள்ள மயக்க இருள் நீங்க, விரும்பத்தக்க மெய்ப் பொருளைக் கருதும் விருப்பத்தை அடியேனுக்கு அருள் புரிந்து, உம்மை உறவு கொண்டு, ஏழுலகங்களையும் நிலை நிறுத்திக் காக்கும் நீதியனே! பழமையான திருவல்லத்திலும் நீலோற்பல கிரியான திருத்தணிகையிலும் வாழும் கருணையனே! உம்மை புதிய வில்வ மரத்திலுள்ள மகிழ்ச்சிதரும் கொழுந்து இலைகளைக் கிள்ளி வீசிப் பூசித்து உமது மலரடிகளைப் பணிய மாட்டேனோ!

விரிவுரை

உய்ய ஞானத்து நெறி கைவிடாதெப்பொழுதும்:-

ஆன்மாவுக்கு உள்ள எண்ணில்லாத துன்பங்களில் தலையாய துன்பம் பிறவி நோய். பிறவி நீங்கினாலன்றி துயரங்கள் நீங்கா. எனவே ஆன்மாக்கள் பெரிதும் முயன்று பெறவேண்டியது பிறவாமையே.

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை”
                                                 -திருக்குறள்

அதினின்றும் தப்புதற்கு ஞான மார்க்கத்தை எப்போதும் விடாது பற்றி ஒழுகுதல் வேண்டும். ஞானமார்க்கம்-உண்மை நெறி.

உள்ள வேதத்துறை கொடுணர்வோதி:-

வேதம்-அறிவுநூல். வித் என்ற பகுதியடியாகப் பிறந்தது வேதம் என்ற சொல். வித்-ஞானம். ஞானத்தைத் தருவது வேதம்.

அதனால் திருஞானசம்பந்தர் “வேதநெறி தழைத்தோங்க” இறைவனை நோக்கி அழுதருளினார்.

சத்தியத்தைப் பேச (சத்யம் வத) என்று வேதம் முழங்குகின்றது. வேதத்தைக் குரு முகமாக நியமத்துடன் இருந்து ஓதுதல் வேண்டும். ‘ஒதுவதொழியேல்’ என்கின்றார் ஒளவையார்.