உள்ள மோகத் திருளை விள்ள:- ஆன்மாவுக்கு உள்ள மோகமாகிய இருள் நீங்க. விள்ள-நீங்க. ஞானமாகிய விளக்கொளி எய்தியவுடன் மோகமாகிய இருள் நீங்குகிறது. மோகப் பொருளை உள்ள மோகத்தருளி:- மோகம்-விருப்பம். விரும்பக்கூடிய பொருளாகிய பரம்பொருளை, நினைக்கும் விருப்பத்தையருளி. இடையறாது இறையாகிய மெய்ப்பொருளைத் தியானிக்க வேண்டும். வைய மேழுக்கு நிலை செய்யு நீதி:- ஏழுலகங்கட்கும் நிலை பெற வைக்கும் நீதியாக நிற்பவர் முருகவேள். ஏழுலகம்:- பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், சனலோகம், தபோலோகம், சத்யலோகம், (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, பிரமந்திரம்) இந்த ஏழுலகங்களும் நிலைநிற்க நீதியை எம்பிரான் செலுத்துகின்றான். பழைய வல்லம்:- திருவல்லம் என்பது ஒரு சிவத்தலம். இது தொண்டை நாட்டில் உள்ள 32 தளங்களில் ஒன்று. தேவாரம், திருப்புகழ்ப் பாடல்கள் பெற்றது. சேக்கிழார் பெரியபுராணத்தில் பாராட்டி யிருக்கின்றார். நீவா நதிக்கரையில் விளங்கும் அருமையான திருத்தலம். வில்வவனநாதர் தநுர்மத்யாம்பாளுடன் எழுந்தருளியுள்ளார். காட்பாடி புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே எட்டு மைல். திருவல்லம் என்று தனியே ரயில் நிலையம் உண்டு. இங்கிருந்து வள்ளிமலை 8 கல் தொலைவு. பழமையான திருத்தலம். பலர் இங்கு தெரிசித்து வினைகள் தீர்ந்து நலம் பெறுகின்றார்கள். |