பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 9

 

“உம்மைக் காண்கின்ற போதெல்லாம் என் உடம்பில் மின்சார உணர்ச்சி பாய்கின்றது” “ஆ! உமது சொல் தேன் போல் தித்திக்கின்றது”, “நீர் தொட்டால் அமுதம் போல் உடம்பு குளிர்கின்றது” என்பது போன்ற சொற்களைக் கொஞ்சி மழலை மொழியால் கிளிபோல் அசைந்து மொழிந்து, எத்தனை எத்தனையோ விதத்தில் ஆடவர்க்கு மோகத்தை யுண்டாக்குவார்கள்.

காட்டுத் தீயைப்போல் ஆசைத் தீயை வளர்ப்பதில் மிக்க சாமர்த்தியம் உள்ளவர்கள்.

முகத்தை மினுக்கி:-

தங்கள் முகத்தை மஞ்சள் முதலிய சாதனங்களால் நன்கு மினுக்குவார்கள். முகத்தை ஒரு முறை ஆடவர் கண்டவுடன் காந்தத்தைக் கண்ட ஊசிபோல் ஈர்க்கப் பெறுவர்.

மொழியாலும்:-

கண் முகம் நடிப்பு இவைகளால் மயக்குவதேயன்றி தேன்போன்ற இனிய சொற்களாலும் மயக்கத்தைப் புரிவர்.

திகைத்த வரத்தில் அடுத்த பொருள்கை திரட்டி எடுத்து வரவேசெய்:-

மேலே கூறிய சாகசங்களால் ஆடவர் திகைப்புறுவர். அம்மகளிர் கேட்ட வரங்களை நல்கி, அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு தங்கள் கரத்தில் கிடைத்த பொருள்களையெல்லாம் திரட்டிக் கொணர்ந்து தருமாறு செய்வார்கள்.

மருட்டு வலைக்குள்:-

மயக்கத்தைச் செய்யும் வலைக்குள் அகப்பட்டு மயங்குதல் கூடாது.

மாதர் யமனாம் அவர்தம் மைவிழியே வன்பாசம்
பீதிதரு மல்குல் பெருநரகம்-ஓத அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகில்லை போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.
                                 -திருப்போரூர்ச்சந்நிதிமுறை

தெவிட்டு கலைக்குள்:-

இன்பத்தை தெவிட்ட வைக்கின்ற காம சாத்திரங்கள். கலை என்ற சொல் ஆடையையுங் குறிக்கும்.