ஓம் குஹாய நம திருப்புகழ் விரிவுரை குன்றுதோறாடல் (ஐந்தாவது படைவீடு) விநாயகமாலை (இராமநாதபுரம் ஜில்லா திருப்புத்தூருக்குக் கிழக்கே ஐந்து மைலில் உள்ளது. பிள்ளையயார்பட்டி என்று வழங்கப்படுகிறது) சரவணஜாதா நமோநம கருணைய தீதா நமோநம சததள பாதா நமோநம அபிராம தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம சமதள வூராநமோநம ஜகதீச பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம உமைகாளி பகவதி பாலா நமோநம இகபர மூலர் நமோநம பவுருஷ சீலா நமோநம அருள்தாராய் இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென் றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும் வசுவெனு மாகார ஈசனு மடிபேண மயிலுறை வாழ்வே விநாயகர் மலையுறை வேலா மகீதர வனசர ராதார மாகிய பெருமாளே. பதவுரை இரவும் - சூரிய மண்டலமும், ஆகாச - வானுலகமும், பூமியும் மண்ணுலகமும், விரவிய துள் ஏற - மறையுமாறு கலந்த துகள் படியவும், |