ஆகா தாவே சந்தரு திப்பொழு தோகோ வாவா வென்று பகட்டிக ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு முறவாமோ பேசா தேபோய் நின்றுறி யிற்றயிர் வாயா வாவா வென்று குடித்தருள் பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் வருதூது பேழ்வாய்வேதா ளம்பக டைப்பகு வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு பேயா னாள்போர் வென்றெதி ரிட்டவன் மருகோனே மாசூ டாடா டும்பகை யைப்பகை சூரா ளோட வன்செரு வைச்செறு மாசூ ராபா ரெங்கு மருட்பொலி முருகோனே வானா டேழ்நாடும் புகழ் பெற்றிடு தேனா றேசூழ் துங்க மலைப்பதி மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் பெருமாளே. பதவுரை பேசாதே போய்நின்று- சத்தமுண்டாகாவண்ணம் மௌனமாகப் போய் ஆய்ச்சியர்களின் வீடுகளில் நின்று, உறியில் தயிர், - உறியில் வைத்திருந்த தயிரை யெடுத்து, வாய் ஆஆஆ என்று குடித்து அருள்-வாயில் அள்ளி ஆஆஆ என்று அவசமைாகக் குடித்தருளியும், பேராலே நீள்-எங்கும் புய பலத்தால் புகழ்பெற்ற, கஞ்சன் விடுத்து எதிர்வரு தூது-கம்சன் கண்ணனைக் கொல்லுமாறு விடுக்க தூதுபோல் எதிர்வந்த, பேழ்வாய்-பெரிய வாயை யுடையவளும், வேதாளம்-பூதம் போன்ற பெரிய சரீரத்தையுடையவளும், பகடைப் பகுவாய்-இடம்பமாகப் பேசிக் கொண்டு வந்த அகன்றவாயை யுடையவளும், நீள் மானாளும்-நீண்ட பெண்ணுருவத்தைக் கொண்டவளும், சரளத்தொடு-தடையின்றி வந்தவளுமாகிய, பேய் ஆனாள்-பூதகியின், போர்- போரை, வென்று எதிர்இட்டவன்-வெற்றி பெற்றவருமாகிய திருமாலினது, மருகோனே-மருகரே! மாசு ஊடாடும்-குற்றத்துடன் கலந்து பழகியவனும், பகையைப்பகை-பகைவரைப் பகைப்பவனுமாகிய, சூர் ஆளோடே- சூரபன்மனோடு, வன் செருவைச் செறு-பொருது வலிபெற்ற போரை யொழித்த, மா சூரா-பெரிய சூரரே! பார் எங்கும்-உலகமுழுவதும், அருள்பொலி-திருவருள் புரிந்து பொலிகின்ற, முருகோனே-முரகக் கடவுளே, வான் நாடு-வானவர் உலகமும், ஏழ்நாடு-சத்த தீவுகளும், புகழ் பெற்றிடு-புகழ்ந்து பேசும் பெருமை பெற்றுள்ளதும், தேன் ஆறு சூழ்-தேனாறு சூழப்பெற்றதும், துங்க மலை பதி- தூய மலைத்தலமானதும் ஆகிய, மாயூரா-மயூரகிரி என்னும் தலத்தினரே! |