ஆராய்கின்ற ஞானமாகிய வேலாயுதத்தையும், மயில் வாகனத்தையும், சச்சிதானந்த வடிவத்தையும் கொடியேனாகிய அடியேன் எப்பொழுதும் மறவாமல் நினைந்து உய்யவேண்டும். விரிவுரை சீரான...............................முகமாறும்:- கோலாகலம் என்பது கோலகாலமென சந்தத்தைக் குறித்து மாறி வந்தது. கோலாகலம்-சம்பிரமம். அபிஷேகம்-முடி. ‘உரகர்பதி அபிஷேக மாயிரமும‘ - திருவகுப்பு(1) தேவாதிதேவர்-தேவ அதிதேவர். முப்பத்துமுக்கோடி தேவர்களும், அவர் களுக்குத் தலைவர்களாகிய மூவர்களும் பணியநின்ற முழுமுதற்கடவுள் முருகவேள். “இதழ்பொதிய விழ்ந்த தாமரையின் மணவறை புகுந்த நான்முகனும் எறிதிரை யலம்பு பாலுததி நஞ்சராமேல் இருவிழி துயின்ற நாரணனும் உமைமருவு சந்த்ர சேகரனும் இமையவர் வணங்கு வாசவனும் நின்றுதாழும் முதல்வ” -(உததியறல்) திருப்புகழ். சீராடு வீர மருவிய ஈராறு தோளும்:- சூராதி யவுணர்களை யழித்து வாகைமாலை சூடியது எம்பிரானுடைய தோள். வீரமடந்தைக்கு வேறு எங்கும் தங்குவதற்கு இடமின்றி குமரன் தோள்களிற் குடிபுகுந்தனள். “அலகிலவுணரைக் கொன்ற தோளென” -திருப்புகழ் அளவிலா அவுணரை யழித்து உலகங்கட்கு வாழ்வு தந்தது அத்தோளே யாகலின், கச்சியப்பர் வாழ்த்துச் சொல்லவந்தபோது முதலில் தோளை வாழ்த்தினர். “ஆறிரு தடந்தோள்வாழ்க” -கந்தபுராணம். நீளும்வரியளி சீராக மோதும் நீபம்:- நீபம்-கடப்பமலர்.வண்டுகள் மலரிலுள்ள தேனை யுண்டு ஸ்ரீராகம் என்னும் இராகத்தைப் பாடுகின்றன. மேலும் புயவடிப்பில், வண்டுகள் இராகமாலிகை பாடுகின்றன என்பார். “வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச மூகராக மதுபம் விழச்சிறு சண்பகஞ் செறிந்த தாரிற் பொலிந்தன” -திருவகுப்பு(15) இத் திருப்புகழை ஸ்ரீராகத்தில் பாடுவது மரபு; மிக்க இன்பத்தை விளைவிக்கும். |