விரிவுரை இத்திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது. ஆன்மாவாகிய தலைவி முருகனாகிய தலைவனை நினைந்து நினைந்து அப்பரமனைத் தழுவப் பெறாமையால் வருந்துகின்ற வருத்தத்தைக் கூறுகின்றது. தவள மதிய மெறிக்குந் தணலாலே:- தவளம்-வெண்மை. காமுகர்க்குச் சந்திரன் வெண்ணெருப்பாகக் கொளுத்தி வேதனை தருவான். சரசமதனன் விடுக்குங் கணையாலே:- சரச லீலையைச்செய்யும் மன்மதன் சமயம் பார்த்துப் பூங்கணைபொழிந்து புண்படுத்துவான். கவன மிகவு முரைக்குங் குயிலாலே:- கவனம் - கலக்கம். பிரிவுத்துயரைக் குயில் கூவி மிகுதிப்படுத்தும். “மெள்ளவரு சோலைக் குயிலாலே மெய்யுருகு மானைத் தழுவாயே” -(துள்ளுமத) திருப்புகழ். கருதி மிகவு மயக்கம் படலாமோ:- “முருகா! உன்னையே கருதி பெண்ணாகிய நான் மயக்கப்பட்டுத் துன்புறுவது முறையாகுமோ? விரைவில் என்னைத் தழுவி என் வேதனையை நீக்கியருள்”. பவளநகரு மிதழ்ப் பைங்குறமாது:- வள்ளியம்மை பச்சைநிறம். இதழ் பவள நிறம். நிறம் மாறுபட்டால் அழகு மிகுதியடையும். “பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்” என்று ஆழ்வாருங் கூறுகின்றார். மயிலின்மலை:- குன்றக்குடிக்கு மாயூரகிரி என்ற மற்றொரு பேருமுண்டு. விரிவுரை குன்றக்குடி குமரா! தலைவியாகிய என்னைத் தழுவியாட்கொள்வீர். நாமேவு குயிலாலு மாமார னயிலாலு நாடோறு மதிகாயும் வெயிலாலும் நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு நாடாசை தருமோக வலையூடே |