பக்கம் எண் :


114 திருப்புகழ் விரிவுரை

 

பொழிப்புரை

கறந்தபாலைத் தாம் மோகமுடன் தேடிச்சென்று, உரலின் மீது ஏறி விளையாடிய போதில், தாயாக வந்த யசோதை காணாதபடி பலைக் களவு செய்த தாமோதரனும் முராரியும் ஆகிய திருமாலின் திருமருகரே! இலட்சுமியின் புதல்வியும், காட்டில் வளர்ந்தவரும், மேகந் தவழும் வள்ளிமலையில் வாழ்ந்தவருமாகிய வள்ளி பிராட்டியார் அன்பு கொண்டு விளையாடுகின்ற புயங்களையுடைய வீரரே! தேவ வுலகம் புகழ்கின்ற நாட்டில் தேனாறு ஓடுகின்ற மாயூர கிரியில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே! அச்சத்தைத்தரும் குயிலினாலும், சிறந்த மன்மதனுடைய கணையினாலும், நாள் தோறும் சந்திரன் காயும் வெளியிலனாலும், அன்புள்ள பெண்கள் கூறும் வசை மொழியாலும், புல்லாங்குழலின் இசையாலும், விரும்புகின்ற ஆசையால் விளைந்த மோகவலையிற் சிக்கிய அடியேன், ஏமாற்றம் அடைந்து, மயக்கமுற்று வீணாக நீண்ட கண்களையுடைய மாதர்களால் உண்டாகுந் துன்பத்துக்குள் சென்று துன்பத்தையடையாத வண்ணம், அழிவில்லாததும் மேலானதுமான நிலையை அடைந்து உம்முடன் இருக்கும் பதத்தை அருள்புரிவீராக.

விரிவுரை

நாமேவு குயிலாலும்:-

நாம்-அச்சம்,காமுகர்க்கு குயிலின் ஓசை ஆசையை அதிகரிக்கச் செய்யும்.

“விருது குயிலது கூவ”  -(இரவியென) திருப்புகழ்.

நாடேறு மதிகாயும் வெயிலாலும்:-

காமுகர்க்குச்சந்திரனுடைய குளிர்ந்த கிரணம் வெப்பத்தைக் கொடுக்கும்.

“இரவியென வடவையென ஆலாலவிடமதென
   உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும் வர”    - திருப்புகழ்.

நார்மாதர் வசையாலும்:-

நார்-அன்புள்ள, அன்புள்ள பெண்கள் வசைமொழி பகர்வார்கள்.

“தெருவினில்நடவாமடவார் திரண்டொறுக்கும்
   வசையாலே”                                   - திருப்புகழ்.

மாதர்துயருடே ஏகாமல்:-

பெண்களினால் வரும் துன்பத்துக்குள் செல்லாமல், திருவருள் நெறியில் செல்லவேண்டும்.