உனுடன்மேவ அருள்தாராய்:- முருகனுடன் இருக்கும் பதம். தாயாகவருசோதை காணாது களவாடு தாமோதரன்:- தாம-உதரன்; தாமம்-கயிறு. உதரன்-வயிற்றையுடையவன். கண்ணபிரான்தாயாக வந்த யசோதைக்குத் தெரியாமல் பால் தயிர் வெண்ணெயைத் திருடியுண்டபோது, அவள் கயிற்றினால் வயிற்றைக் கட்டினாள். அதனால் தாமோதரன் என்று பேர் பெற்றார். விளக்கம் திருப்புகழ் விரிவுரை 5ஆம் தொகுதி 110-ஆம் பக்கத்தில் காணலாம். “தயிர்நெய்விழுங் கிட்டு ஆய்ச்சியர் தாம்பினால்ஆர்க்கத் தழும்பிருந்த தாமோதரா” - பெரிய திருமொழி. முராரி:- முரன் என்ற அரக்கனைக் கொன்றதனால் முராரி எனப் பேர் பெற்றனர். சிலைமாது மாலாகி விளையாடு புயவீரா:- வள்ளிநாயகி முருகவேள் மீது மிகவும் அன்புவைத்து புயமாகிய மலையில் விளையாடினாள். “குறமாது தனக்கு விநோத கவினாரு பயத்தி லுலாவு விளையாடிக் களிகூரும்..........................” - (நிலையாத) திருப்புகழ். தேனாறு புடைசூழ மாயூரகிரி:- கானாறும்தேனாறும் ஓடும் வளமையுள்ள மலை குன்றக்குடி. கருத்துரை குன்றக்குடி மேவு குமரா! உன் உடனாகும் பதத்தைத் தந்தருள்வீர். திருச்செங்கோடு இது கொடிமாடச் செங்குன்றூர் என்று தேவாரத்தில் வழங்கும். திருஞானசம்பந்தர் விஷ சுரந்தீர “அவ்வினைக் கிவ்வினை” என்று தேவாரம் பாடிய தலம். சங்ககிரி துர்க்கம் என்ற புகை வண்டி நிலையத்திலிருந்து 6கல். கோயில் மலையின்மீது விளங்குகின்றது. இங்கே சுவாமி அர்த்தநாரீச்சுரர், இம்மூர்த்தியின் திருவுருவமும், முருகவேளின் திருவுருவமும், நவபாஷாணத்தால் ஆகியது. |