ஒன்றுபட்டால் அதன் சூட்சுமமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களும் ஒன்றுபடும். மன்பேது மண்டி:- மன்-நிலைபேறு. பேது-அறியாமை. நிலைபெற்ற அறியாமையுடன் கூடியது ஆன்மா. குன்றாமலைந்து அலைவேனோ:- குன்ற-குன்றதலையடைந்து, மலைதல்-ஒருவழிப்படாது நிற்றல். மன்றாடி:- சிவபெருமான்திருமுன்வந்து பணிந்தவர்களின் பிறவித் துயரைத் தொலைத்து ஆட்கொள்ளுவர். “அறிவாலறிந்து னிருதாளி றைஞ்சும் அடியாரிடைஞ்சல் களைவோனே” - (விறல்மார) திருப்புகழ். தொலைத்த என்ற சொல் தொலைந்த என்று சந்தத்துக்காக நின்றது. சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும்:- இந்த அடி மிக அருமையானது; சுவையானது; அன்பர்கள் மனதில் மறவாமல் பதித்துக் கொள்ள வேண்டியது. “முருகா! அடியேன் சென்ற சென்ற இடங்களில் “கந்தா” என்று உன்னை அழைப்பேனாயின் நீ சேவன் கொடியைக் கையில் ஏந்திகொண்டு என்முன் வந்து காட்சி தரவேணும்” என்று அருணகிரி சுவாமிகள் உருக்கமாக வேண்டிக் கொள்ளுகின்றார். முருகவேள் அடியவரது அல்லலை யகற்றச் செல்லும்போது சேவல் கொடியுடன் சென்றருள்வார். சயந்தன் கனவில் கந்தவேள் சென்று காட்சிதந்தபோது சேவல் கொடியுடன் சென்றார் என்று கந்தபுராணங் கழறுகின்றது. “வீறு கேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம் ............................அறுமுகங் கொண்டு வேளடைந்தான்” - கந்தபுராணம். எனும் பொழுது என்ற சொல், எனும்பொ என வந்தது. செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு:- செஞ்சாலி-நெற்பயிர். கஞ்சம்-தாமரை. நெற்பயிர்பசியைத் தீர்ப்பது. தான்யம் தான்ய லட்சுமி; தாமரையில் இருப்பவள் தனலட்சுமி. செந்நெல்லும் தாமரையும் |