பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 125

 

அடியார்களுடன் ஒன்றுபடும் பேற்றினை என்று அடியேன் பெறுவேனோ?

பொழிப்புரை

கிரவுஞ்சமலை இருகூறு படவும், சிறைப்பட்டிருந்த தேவர்கள் தம் ஊரில் குடியேறவும், அமராவதி நகரம் வாழவும், மும்மதம் பொழியவும், யானை தேர் குதிரை காலாள் என்ற வலிய சேனைகள் அழியவும், பழைய மீன்கள் வாழும் அலைமிகுந்த கடல் முறையிடவும், அசுரர்கள் வருந்தவும் வெற்றி பெற்ற கதிர் வேலவரே! உலகத்தின் வறுமை நீங்குமாறு விளைகின்ற வயல்களால் அலங்கரிக்கப்பட்ட திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே! எல்லை கடந்து உருகும்படிச் செய்யும் மீன்போன்ற கண்ணையுடையவரும், கற்கண்டுபோன்ற செவ்விய மொழிகளையுடையவருமாகிய மடமாதர்களாகிய பொருட் பெண்டிர் சேர்க்கையால் வரும் மயக்கக் கடலில் முழுகிய வழியில் அறிவு கலங்கி மயங்கும் வினையேனாகிய சிறியேன், மொழிகளையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உமது பாத தாமரை மலர் மீது உறுதியுடன் அர்ச்சிக்க நினையும் அடியார்களுடன் ஒன்றுபடும் பேற்றினை என்று பெறுவேனோ

விரிவுரை

கரையறவுருகுதல் தருகயல் விழியினர்:-

தம்பார்வையால் ஆடவர் ஓர் எல்லையின்றி உருகுமாறு செய்யும் விழியையுடையவர்கள் பொருட்பெண்டிர்.

அடியார்கள், தம் மொழி உயிர் அறிவு உணர்வு என்ற அனைத்தையும் முருகன் திருவடியில் மலர்களைப் போல் அர்ச்சித்து விடுவார்கள்.

அடியரொடொன்றாக என்று பெறுவேனோ:-

அடியாருடன்ஒன்றுபடுவதே பெறுதற்கு அரிய பெரும் பேறாகும்.

கண்ணில்லா பசு பசுமந்தையில் சேர்ந்தவுடன் சுற்றியுள்ள மாடுகளுடன் உரர்ய்ந்து ஊர் புகுமாப் போல், ஞானக் கண்ணில்லாத நாம் அடியவர் குழாத்துள் கூடிவிடுவோமாயின், அடியவர் சேர்க்கை நம்மை முக்தியுலகில் சேர்க்கும் எனவுணர்க.

சூரிற் கிரியிற் கதிர் வேலெறிந்தவன் தொண்டாகுழாம்
சாரிற்கதியின்றி வேறில்லை காண் தண்டு தாவடிபோய்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறி யென்றறி யாதபாவி நெடுநெஞ்சமே.-கந்தரலங்காரம்(49)