கோது முதலிய குற்றம் அகன்ற கருப்பஞ் சாறுபோல இனிக்க இனிக்கப் பொதுமாதர்கள் பேசுவார்கள். அவ்வாறு பேசி ஆடவர்களின் உள்ளத்தையும் உணர்வையும் நீராக உருக்கி விடுவார்கள். போதகம் எனக் கென்றே பெற விருப்பம் சாலவும் உடையேனான்:- அருணகிரிநாதர் யாரும் பெறாத ஞானத்தையும், வாக்கு வன்மையையும் பெறவேண்டும் என்ற விருப்பங்கொண்டிருந்தார். “பிறருக்குக் கிட்டாத வகையில் சிறப்பாக நான்ஞானம் பெற்று விளங்க வேண்டும்” என்று விரும்புகின்றார். “எனக்கென்றப் பொருள் தங்க தொடுக்கும் சொல் தமிழ் தந்திப் படியாள்வாய்” (பருத்தந்தம்) திருப்புகழ் “சீருந்திருவும் பொலிய சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற்றேன்; பெற்றது ஆர்பெறுவார்” - திருப்பல்லாண்டு அழைத்துன் சீரிய கழற் செந்தாமரை அடுக்கும் போதமுடையோராம் சிலர் கன்றேகதி பலிக்குந் தேசிக:- முருகனுடைய திருவடிகளைச் சார்ந்து சிவஞான போதகம் உடைய அடியார்களை, முருகன் தானே வலிய அழைத்துத் தாமதம் இன்றி அப்பொழுதே அருள் வழங்குவான். பாலிக்கும் என்ற சொல் பலிக்கும் என வந்தது. “அடியவர் இச்சையில் எவையெவை யுற்றன அவை தருவித்தருள் பெருமாளே” - (கலகலெனச்சிலை) திருப்புகழ். கூப்பிட்டு அருள் வழங்கும் அருளாளன் ஆறுமுகன். திருச்செங்கோபுர வயலூரா:- வயலூரில் அழகிய கோபுரம் அருணகிரியார் காலத்திலேயே சிறந்திருந்தது. திதிக்கும் பார்வையின் மதிப்புண்டாகிய திருச்செங்கோடு:- திதிக்கும்-காத்தல், பார் வயின்-பூமியிடத்தே, முருகப் பெருமானால் காப்பற்றப்படுகின்ற இப்பூமியின் கண் மிகவும் மதிப்புடைய திருத்தலம் திருச்செங்கோடு என சுவாமிகள் தெரிவிக்கின்றார்கள். கருத்துரை திருச்செங்கோட்டு வேலா! மனமாசு அற அஞ்சேல் என்று கூறி ஆட்கொள்வீர். |