சோதி முருகா எனுங்காதல் கொடு தானிருந்தோத:- “சோதி முருகா!” “சோதி முருகா!” என்று காதலுடன் தனிமையிலிருந்து ஓதுதல் வேண்டும். “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்” - தேவராம். இருவோரகம் பேறு:- இரு-பெரிய-பெருமை. ஓர்-ஒப்பற்ற, அகம்-உள்ளம். பெருமை தங்கிய ஒப்பற்ற உள்ளத்தில் பேறு பெறும் ஞானத்தைத் தந்தருள். கவுரி:- கவுரம்-பொன்னிறம். தூளணைந்தாள்:- தூள் - விபூதி. கழைகொள் தோளி:- கழை-மூங்கில். மூங்கில் போன்ற உருண்ட தோள்களை யுடையவள். “வேயுறு தோளிபங்கன்” - தேவாரம். பரமதேசிகந்தா:- பரம தேசிக அந்தா, பரமனுக்குக் குருவே! அழகனே! தோதகம் பாட:- தோதகம்-வல்லமை. முருகனுடைய வல்லமையைப் பாடித்துதித்தார்கள். வேலெறிந்தே நடனமும் கொள்வோர்:- வேலால்சூரனைச் சங்கரித்தவுடன் முருகவேள் துடிக்கூத்து ஆடியருளினார். “மாக்கடல் நடுவண் சூர்த்திறங்க கடந்தோன் ஆடிய துடியும்” - சிலப்பதிகாரம் மாலியன்:- மாலியவான்.. இவன் இராவணனுடைய சிறிய பாட்டன். தலைமை அமைச்சனுமாக இருந்து அறிவுரைப் பகர்ந்தான். “மதிநெறி யறிவு சான்ற மாலியவான்” - கம்பராமாயணம். காணமுடியோன்:- காணம்-பொன். “காண மொன்றில்லைஸ - தேவாரம். மறைகுலாவு செங்கோடை நகர்:- திருச்செங்கோட்டில் எப்போதும் வேத முழக்கம் முழங்குகின்றது. |