திருவுளத்தில், பற்று ஒன்றும் இன்றி தினந்தோறும் மகிழ்ச்சியடையும், செண்பக மலரணியும் சிவபெருமானுக்கு த்வம் என்ற சொல்லுக்கு விளக்கத்தை உபதேசித்துத் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் அழகிய பெருமிதம் உடையவரே! நிலையின்றி இறத்தலையுடைய பிறப்பின் தும்பையறுத்து, இன்று ஓர் ஒழுக்கத்தில் நிலைத்து நிற்கப் புத்தியில்சற்றேனும் மேற்கொள்ள அறியாமல், சினந்தும் முயன்றும், சந்தேகங்கொண்டும், விஷம் போன்ற துன்பங்களால் மனம் புண்ணாகித் தாமரை போன்ற மை பூசிய கண்களையுடைய மாதர்களின் மீது, ஆசை பொருந்தி நெருங்கிய எனக்கு நற்குணத்தையளித்து, வண்டு உண்ணுந் தேன் பொருந்திய பூந்தாதுக்களுடன் கூடிய வயலூரில் தொண்டு பட்டு, அஷ்டாங்க வணக்கம் செய்து உம்மைத் தெரிசித்துப் பற்றுதற்கு, தண்டை முதலிய அணிகலன்கள் அணிந்த, தூய சிவந்த பாத தாமரையைத் தந்தருளுவீராக. விரிவுரை பொன்றலைப் பொய்க்கும் பிறப்பு:- பொன்றுதல்-இறத்தல். பொய்-நிலைபேறு இல்லாதது. இறத்தலும் தோன்றி மறையுந் தன்மையும் உடையது. இப்பிறப்பு. தும்பறுத்து:- பிறப்பையுண்டாக்கும் தும்பு போன்றது வினை. வினையொழிந்தால் பிறப்பு ஒழியும். துன்றுமிச்சைப் பண்டன்:- இச்சை நெருங்கிய பொருளன். பண்டம்-பொருள். தும்பி பட்சிக்கும் ப்ரசம்:- பிரசம்-தேன். வண்டு பருகுவது தேன். செய்ப்பதி மீதே தொண்டுபட்டுத் தொண்டனிட்டு:- அருணகிரியாரை ஆட்கொண்ட திருத்தலம் வயலூர். அங்கு அருணகிரியார் தொண்டுபட்டார். தண்டைவர்க்கத் துங்கரத்தப் பங்கயம்:- தண்டை. சிலம்பு, கிண்கிணி முதலிய அணிகலன்கள் அணிந்த பாதம். துங்கம் அரத்தம். துங்கம்-தூய்மை, அரத்தம்-சிவப்பு. தூய சிவந்த தாமரைத்தாள். சம்பழுத்தி:- சம்பு-சம்பங்கோரை, சம்பங்கோரை போல் நுனியால் அழுத்தி, |