பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 15

 

தங்கள் தங்கள்உரைகளே சிறந்தன என்று கலகம் உண்டாயிற்று. “இவர்கள் உரைகளை யாய்ந்து இதுவே சிறந்தது என்று முடிவு கூறுவதற்கு இவரினும் சிறந்த கல்வி கரைகண்ட புலவர் யாண்டுளார்? என் செய்வேன்? ஆண்டவனே! தேவரீரே இக்கலகத்தை நீக்கி யருள்செய்ய வேண்டும்” என்று தென்னவனாகிய மன்னவன் முன்னவன் திருமுன் முறையிட்டனன்.

“வேந்தனே! இவ்வூரிலே உப்பூரிகுடிகிழார் மகனாவன் உருத்திரசன்மலை யழைத்துவந்து உரை கேட்பின் மெய்யரை அவன் தெரிக்கும். அந்தப் பிள்ளை குமார சுவாமியாகும். மெய்யுரைக்குக் கண்ணீர் சொரிந்து உடல் கம்பித்து ஆனந்தமடைவன்” என்று அசரீரி கூறிற்று. *

அதுகேட்ட புரவலனும் புலவரும் விம்மிதமுற்றுத் திருவருளைப் புகழ்ந்து, வணிகர் திருமனையில் அதரித்து வளரும் உருத்திர ஜன்மரிட மேகினர். அந்தக் குழந்தை, செங்கண்ணன்; புன்மயிரன்; ஐயாட்டைப்பருவத்தன்; மூகைபோல் ஒன்றும் பேசலன்; இதத்தகு முழுதுணர்புலவனாம் முருகக் குழந்தையை அனைவரும் வணங்கி முறைப்படி அழைத்து வந்து, சங்கப்பலகையிலிருந்து வாச நீராட்டி வெண்டுகில் வெண்மலர், வெண்சாந்தி முதலியவற்றால் அலங்கரித்து, போற்றிசெய்து புலவர் யாவரும் தத்தம் உரைகளை வாசித்தனர். உருத்திரசன்மராம் கந்தக் கடவுள் அவ்வுரைகளைக் கேட்டு வரவாராயினார். சிலர் சொல் வைப்பைக் குறிப்பினால் இகழ்ந்தார். சிலர் சொல்லழகைப் புகழ்ந்தார். சிலர் பொருளாழத்தை உவந்தார். சிலர் பொருளை பெறுத்தார் கபிலர், பரணர் என்னும் புலவர்கள் வாசிக்கும்போது ஆங்காங்கு மகிழ்ந்து தலையை யசைத்னர்; மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார் தம்முரையை வாசித்தபோது ஒவ்வொரு சொல்லுக்கும் பொருட்சுவை நோக்கித் தலையசைத்து மெய் புளகித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து இதுவே உண்மை யுரையென விளக்கியருளினார். பாண்டியனும் பாவலரும் மெய்யுரை பெற்றேமென்று கழி பேருவகை யுற்றனர்.

நுழைந்தான்பொருடொறுஞ்சொற்றொறு நுண்டீஞ் சுவையுண்டே
தழைந்தானுடல்புலனைந்தினுந் தனித்தான் சிரம்பனித்தான்
குழைந்தான்விழி வழிவேலையுட்குளித்தான்றனையளித்தான்


* அசரீரி கூறியதாக அந்நூலுக்கு உரைகண்ட நக்கீரர் பாயிரத்தில் கூறினர். இனி திருவிளையாடற் புராணத்துள் பெருமான் புலவர்போல் வந்து கூறியதாகவும் தனபதி என்னும் வணிகனுக்கும் குணசாலினிக்கும் மகனாகி வளர்ந்தார் என்றும் கூறும்.