சீலஅகத் தியஞான தேனமுதைத் தருவாயே மாலயனுக் கரியானே மாதவரைப் பிரியானே நாலுமறைப் பொருளோனே நாககிரிப் பெருமாளே. பதவுரை மால் அயனுக்கு அரியானே-திருமாலுக்கும் திசைமுகனுக்கும் அறிதற்கரியவரே! மாதவரை பிரியானே-பெருந்தவம் புரியும் அடியார்களைப் பிரியாதிருப்பவரே! நாலுமறை பொருளோனே-நான்கு வேதங்களின் உட்பொருளாய் விளங்குபவரே! நாககிரி பெருமாளே-திருச்செங்கோட்டில் வாழ்பவரே! காலன் இடத்து அணுகாதே-இயமனிடத்தில் அடியேன் அடையாமலும், காசினியில் பிறவாதே-இப்பூவுலகில் மீண்டும் அடியேன் பிறவாமலும், சீல அகத்திய ஞான-இன்றியமையாத ஒழுக்கத்தால் உண்டாகும், மெய்யறிவால் விளைகின்ற, தேன் அமுதை தருவாயே-இனிய திருவருளமிர்தத்தைத் தந்தருள்வீர். பொழிப்புரை நாராயணருக்கும் நான் முகருக்கும் அறிதற்கு அரிய பரம்பொருளே! நற்றவமுடைய திருத்தொண்டர்களை விட்டுப்பிரியாதிருப்பவரே! நால்வேதங்களின் உட்பொருளாய் விளங்குபவரே! திருச்செங்கோட்டில் வீற்றிருப்பவரே! அடியேன் இயமனிடத்துச் சேராமலும், இனிப் பிறந்துழலாமலும், அவசியமான ஒழுக்கத்தால் உண்டாகும் மெய்யறிவில் ஊறும் திருவருளமுதத்தை யருள்வீர். விரிவுரை இவ்வருமைத் திருப்புகழ் வடிவிற் சிறியதாயும் பொருளமைப்பிற் பெரியதாயு மிருப்பதனால் அன்பர்கள் ஒவ்வொரு நாளும் இதனைப் பாராயணஞ் செய்வார்களாக. காலனிடத் தணுகாதே......................மாதவரைப்பிரியானே:- முருகனடியார்கள் கூற்றுவனூர்க்குச் செல்லாராதலின் யமபயமில்லையாயிற்று. காலன் வசப்பட்டார் மீண்டும் பிறப்பாராதலின், “காசினியிற் பிறவாதே” என்றார். “மாலயனுக்கரியானே” என்றது கண்டு, அரியயனுக்கு எட்டாத ஆண்டவன் நமக்கு எட்டுவனோ என்ற மலையா திருக்கும் பொருட்டு, “மாதவரைப் பிரியானே” என்றனர். |