பக்கம் எண் :


172 திருப்புகழ் விரிவுரை

 

பொய்எனப்படும். சில காலம் இருந்து பின் மறைந்து அழியக் கூடியது பொய் எனப்படும்.

உலக வாழ்வு நிலைபேறில்லாதது. அதனால் அது பொய் வாழ்வு. அதில் அகப்படும் சிக்கினை யகற்றுதல் வேண்டும்.

திணிதாய சித்ர வாக்குப் பெற்று:-

“வலிமையான அழகிய வாக்கைப் பெற வேண்டு்ம்” என்று சுவாமிகள் முருகனை இங்கே வேண்டுகின்றார். முருகப் பெருமான் கொடுக்க அவர் பெற்றார். வேறு ஒருவருக்கும் இல்லாத அருமையான அழகிய இனிய வாக்கையுடையவர் அருணகிரிநாதர்.

வாக்கிற் கருணைகிரி வாதவூரார் கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர்-நோக்கிற்கு
நற்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதிக் கப்பரெனச் சொல்.

செச்சை சாத்தப் பெறுவேனோ:-

வாக்கினால் இறைவனை வாழ்த்த, வாழ்த்தியதற்குப் பரிசாக இறைவன் தனது திருமார்பில் உள்ள வெட்சி மாலையை வழங்கி அருள்புரிகின்றான். அப்பேற்றினைப் பெற வேண்டும் என்கிறார்.

கொத்து நூற்றுப் பத்து நாட்டக் கொற்ற வேத்து:-

ஆயிரங்கண்களை யுடையவன் இந்திரன். சகஸ்ராட்சன் என்ற பேருடையவன்.

“நூற்றுப் பத்தடுக்கிய நாட்டத்து நூறுபல்
   வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
   ஈரிரண்டேந்திய மருப்பின் எழில்நடைத்
   தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்” - திருமுருகாற்றுப்படை.

குக்குடாத்த:-

குக்குட அத்த.

“சேவலங்கொடியான பைங்கர” -(மூலமந்திர) திருப்புகழ்

சர்ப்ப கோத்ர:-

கோத்திரம் - மலை. சர்ப்ப கோத்திரம் - நாககிரி - திருச்செங்கோடு.

தத்துவ நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டு மேற்று:-

தொண்ணூற்று ஆறு தத்துவங்கள்.