தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே! கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்ற நான்கு திசைகளில் உள்ள அடியார்கள், இது அற்புதம் அற்புதம் என்று மெச்சும்படி, அழகிய கவி பாடுந் திறத்தின் ஒலி மிகுந்த திருப்புகழை அடியேன் சிறிது சொல்லும்படிச் செய்து அப்பாடல்கள் உலகெலாம் பாவும் படியும் செய்த அருள் திறத்தை ஒருபோதும் மறவேன். விரிவுரை பத்தர் கணப்பிய:- முருகப்பெருமான் அடியார் திருக் கூட்டத்தின் மீது மிகுந்த அன்புள்ளவர். “அடியார்க்கு நல்ல பெருமாள்” - கந்தரலங்காரம் (33) நீர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக:- கலைகளில்சிறந்தது. ஆடற்கலை. தெய்வங்களில் சிறந்தது நடராஜமூர்த்தி. இயல்பாக, கற்றுக் கொடுப்பார் யாரும் இன்றி, ஆடுவது மயில். பூர்வ பச்சிம் தெட்சிண உத்திர திக்குள பத்தர்கள் அற்புதம் என ஓதும்:- திருப்புகழை கேட்டு, நான்கு திசைகளில் உள்ள அடியார்கள், ஆ! ஆ! இது அரியது, அற்புதமானது என்று வியந்து புகழ்கின்றார்கள். சித்ர களித்துவ சத்த மிகுத்த திருப்புகழ்:- சித்ரம்-அழகு.கவியில், சொல்லழகு, பொருளழகு, நடையழகு, தொடையழகு முதலிய பல அழகுகள் அமைந்திருக்க வேண்டும்., கவித்துவம்-கவி பாடுந் திறன். இதற்கு முன் 157 ஆவது பாடலில், “சித்ரவாக்குப் பெற்று வாழ்த்தித் துதிக்கின்ற திறத்தைத் தந்தருள்” என்று வேண்டினார். இந்தப்பாடலில் “சித்ரவித்துவ சத்த மிகுந்த திருப்புகழைப் பாடுந் திறத்தை முருகன் அருளினார். அந்த அநுக்கிரகத்தை மறக்கமாட்டேன்” என்று கூறுகின்றார். செப்பெனவைத்து:- தீ திருப்புகழைச் செப்பு என்று முருகன் அருள் புரிந்தார். “செய்ப்பதி வைத்து” எனவும் பாடம். செய்ப்பதி-வயலூரை வைத்துப்பாடு என்று முருகன் அருளியதை இது குறிக்கின்றது. |