பவரும், மேரு கிரியை வில்லாகவுடையவரும், ஆயிரமுகங்களையுடைய கங்கா நதியைத் திருமுடியில் தரித்தவரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே! அருட்குணங்களையுடையவரே! சாப்பசயிலமாகிய திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருப்பவரே! தயா சிலரே! கற்பத்தருவுடன் கூடிய பொன்னகரத்தாசியாகிய இந்திராணியின் திருமகளாராகிய தெய்வயானை யம்மையாருக்கு வாழ்வாக விளங்குபவரே! நீண்ட வுடலிலிருந்து இருள் வீசவும், பற்களிலிருந்து ஒளிவீசவும், சுழல்கின்ற கண்களிலிருந்து நெருப்புப்பொறி வீசவும், குலைமகள் ஏழும் நெரிந்து தூள்படவும், அதிர்கின்ற குரலிலிருந்து புகையெழவும், இடியைப்போன்ற ஓசை எழவும், அகன்ற வானுலகமும் மண்ணுலகமும் அச்சப்படவும், அசுரர்களுடைய சேனைகள் யாவும் மாய்ந்தொழியுமாறு ஒப்பற்ற சர்வசங்காரப் படையை ஏவியருளிய தனிப்பெருந் தலைவரே! மேலான குருநாதரே! இந்திரன் புகழும் பெருமிதமுடையவரே! தேவரீருடைய சரணாரவிந்தங் களிரண்டையும் வழிபடுகின்ற அடியேன் உமது திருவருளைத் துணையாகக் கொண்டு, கொடிய கூற்றுவனும், அவனுடைய சேனைகளும் மடியுமாறு போர் செய்கின்ற நாள் ஒன்று உண்டல்லவா? அன்று அப்போரைக் கண்டு மகிழும் பொருட்டு வள்ளியம்மையாருடனும், பன்னிர புயாசலங்களுடனும், ஆறு திருமுகங்களுடனும், பதினெட்டு திருக்கண்களும், சூரியனை அங்கப் பிரத்தியங்கங்களும் வெளிப்படவும், பத்துக் திக்குகளும் பூமியும் நீண்டகடல்கள் ஏழும் பழைய சக்கரவாளகிரியும் உடன்வந்து அசைய ஆடுகின்ற ஒப்பற்ற பச்சை மயில் வாகனத்தின்மீது ஏறி, பழைய திருத்தொண்டர்களும் தேவர்களும் இருபக்கங்களில் மிகுந்த இனிமையுடைய தமிழ்ப்பாடல்களையும் வேதப்பாடல்களையும், பாடித் துதித்துவரவும், முன்னொரு விசை அடியேன் முன்வந்ததுபோல், திருவண்ணாமலையில் இன்னொரு விசை வந்தருளல் வேண்டும். விரிவுரை இப்பாடலின் பிற்பகுதியில் தர என்பது 13 முறையும் எழ என்பது 6 முறையும் வந்ததிருப்பது கவனிக்கத் தக்கது கொடிய மறவியும்............................................அமர்காண;- உலகில் ஒருவர்க்கொருவர் மாறுபட்டுப் போர்புரிகின்ற இடத்தில் உடனே பெருங் கூட்டங் கூடிவிடுவது இயற்கை. |