பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 187

 

சண்டையைப் பார்ப்பதில் யாருக்கும் விருப்பந்தானே? ஆதலால், கூற்றுவனுக்குந் தனக்கும் நிகழப்போகும் ஒரு பெரும் போரைக் காண்பதற்கு அருணகிரியார் முருகக்கடவுளை யழைக்குந் திறம் எத்துணை அழகும் வியப்பும் தருகின்றது. இதனை ஊன்றிச் சிந்திக்குந் தோறும் சிறுமுறுவலும் தோன்றுகின்றது. முருகன் சிறுகுழந்தையல்லவா? குழந்தைகளுக்குச் சண்டையைப் பார்ப்பதில் மிகுந்த விருப்பமுண்டல்லவா? ஆனபடியால் இப்பாடல் 7ஆவது அடியில் “சிவசுது” என்றனர்.

கூற்றுவனுடன் தான் செய்யும் போரும் முருகனுடைய திருவளையே துணையாகக் கொண்டு செய்வதாகவும் தற்போதமும் முனைப்பும் கொண்டு செய்யவில்லை யென்றும் குறிப்பிடுதற்பொருட்டு, “நினதருள் கொடு” என்றனர். இனி இப்போரில் வெற்றியும் தோல்வியும் எவர்பால் நிகழுமோ? என்று ஐயுற வேண்டாம்; நிச்சயமாக வெற்றி தனக்கே என்ற துணிவு கொள்ளும் பொருட்டு, “மடிய” என்றனர். கூற்றுவனுக்குப் படைத்துணையதிகமாயிற்றே? அதனால் எப்படி வெல்லமுடியும்? என்னும் ஐயத்தை விலக்கும் பொருட்டு, “அவனது கடகமும் மடிய” என்றனர். “அப்படி யாவரையும் அடக்கும் எமனை வெல்லும் ஆற்றலுடையேன் நான்” செருக்கு ஒரு சிறிதுமில்லை என்று விளக்கும் பொருட்டு, “இருபதம் வழிபடும் குதலை யடியவன்” என்றனர். எமனை ஏன் கொல்கின்றாய்? என்ற வினாவுக்கு விடையாக “கொடிய மறலி” என்று விடை பகர்கின்றனர். இயமனை வெல்லுதற்கு நீ மிகப்பெரியவனோ? என்னில் “இல்லை, சிறுவன்தான்” என்பதாக “குதலை” என்றனர், “இக்குழந்தைப் பருவத்திலேயே இயமனைக் கொல்வதாயின் இன்னும் யெவனப்பருவம் வானி எத்தனை ஆற்றல் மிகும்” என்னும் குறிப்பும் வெளிப்படுகின்றது. இவற்றையெல்லாம் சிந்திப்பார்க்குச் சித்தம் தித்திக்குமல்லவா?

குறவர் மகள் புணர் புயகிரி:-

வள்ளியம்மையார் இச்சா சக்தியாதலின் “குறவர் மகள் தழுவுகின்றதோள்” என்றனர்.

வெகுநயனம்:-

“அஷ்டாதச விலோசனம்” என்ற கந்தபுராணத் திருவாக்கின்படி முருகக் கடவுளுக்குப் பதினெட்டுக் கண்கள்.

ரவியுமிழ் கொடிய:-

சேவல் கூவிய பிறகே கதிரவனுதிப் பனாதலினால்