பக்கம் எண் :


192 திருப்புகழ் விரிவுரை

 

கற்ற விஞ்ஞை சொல்லி:-

விஞ்ஞை-விஞ்சை; வித்தை. நான் கற்ற வித்தைகளை ஆங்காங்கு சென்று சொல்லித் திரிவார்கள் பலர், கற்ற வித்தையால் கதி கிட்டாது.

எத்தனைதான் கற்றாலும் எத்தனைதான் கேட்டாலும்
எத்தனைசாதித்தாலும் இன்புறா-சித்தமே
மெய்யாகத் தோன்றி விடுமுலக வாழ்வனைத்தும்
பொய்யாகத் தோன்றாத போது.         - சிவபோகசாரம்.

எண்மையுள்ளுகக்க எண்ணி:-

எண்மை-எளிமை. தான் எண்ணிய எண்ணங்கள் சுலபமாக நிறைவேறும் என்று எண்ணி உள்ளம் மகிழ்வர்.

நகைமாதர் இட்ட மெங்ஙனல்ல கொட்டி யங்ஙனங்கியிட்டு:-

சிரித்துச்சிரித்துப்பேசும் பொது மாதர்கள் விருப்பம் எப்படி எப்படியோ யெல்லாம் பொன்னையும் பொருளையுந் கொட்டிக் கொடுத்து ஆடவர் வறியாரவார்.

எத்து பொய்மையுள்ள லுற்றுமின்மை யுள்ளி எற்றும்:-

எத்துதல்-ஏமாற்றுதல். பிறரை ஏமாற்றி பொய் வழியை ஆலோசித்தும், பொன் பொருள் இல்லாமையை நினைத்து வருந்தியும் சிந்தை வெந்து நொந்து நைவர். ஏற்றுதல்-வருந்துதல்.

“எற்றிய காதலினால் இசைத்தான்” -தஞ்சைவாணன்கோவை (224)

இங்ஙனைவ தியல்போதான்:-

இவ்வாறு பொருட் பெண்டிருக்கு அள்ளிக் கொடுத்து, வறுமையில் வாடி, பொருள்தேடி, பொய்யைக் கூடி வருந்துவது தகுமோ? தகாது.

முட்டவுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே:-

இந்த அடியில்முருக சொரூபம் பெற்ற அபர சுப்ரமண்யரில் ஒருவர் மதுரையில் செட்டி மகனாகத் தோன்றி, உருத்திர சன்மர் என்ற பேருடன், சங்கப் புவலர்கள் இறையனார் அகப் பொருளுக்குச் செய்த உரையின் தாரதம்மியத்தைக் கூறியருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார்.

இதன் விரிவை எமது பழநித் திருப்புகழ் விரிவுரை 81ஆம் பக்கத்தில் வுணர்க.

முத்துவண்ண வல்லி சித்ரவண்ணவல்லி:-

தெய்வயானையம்மை முத்துபோன்ற ஒளியும் அழகிய நிறமும் உடையவர்.