பக்கம் எண் :


198 திருப்புகழ் விரிவுரை

 

கண் தொலைவிலுள்ளதைக் காட்டுவதுபோல் மேல் விளைவதைத் தெரிவிப்பது ஜ்யோதிஷம்.

(6) கல்பம் (கை)

காரியங்களைச் செய்வதற்குக் கரம் என்று பேர். சத்கர் மாக்களை வரையறுப்பது கல்பம். இன்ன வருணத்தார்; இன்ன ஆச்சிரமத்தார்; இன்ன இன்ன கர்மாவைச் செய்யவேண்டும். இன்ன கர்மாவுக்கு இன்ன மந்திரம்; இன்ன திரவியம்; ரித்விக்குக்களுக்கு இலக்கணம். பாத்திரங்களின் அமைப்பு; இவற்றை விளக்குவது கல்பம்.

“வேதமோடாறங்கமாயினை” என்று தேவாரமும், “கருதிய ஆறங்கவேள்வியந்தணர்” என்று திருப்புகழும் கூறுகின்றது.

பலப்பல நாதங்கள்:-

அநேக வித ஒலிகள், யாவும் இறைவன் மயமே யாகும்.

“ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே”           - அப்பர்.

அல்கபசுபாசங்கள்:-

பசு பாசங்களின் குற்றமும் குறையும் பொருட்டு அவற்றில் இறைவன் நீக்கமின்றி நிற்கின்றான்.

சொருபானந்த பௌவமுறவே நின்றதருள்வாயே:-

ஆனந்த சொரூபமான சுகக்கடலில் முழுக அருள்செய் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

கல்லுருக வேயின்கண்...........................குழலூதி:-

கண்ணபிரான்புல்லாங்குழல் ஊதிய போது அங்கிருந்த கல்லுகள் உருகினவாம்.

இசைக்குக்கல்லும் இரும்பும் உருகும்.

ஒரு சமயம் இராவணன் அகத்தியர் வாழும் பொதியமலை சென்று அவருடைய தவத்துக்கு இடையூறு விளைவித்தான். வீணையில் வல்லோம் என்ற தருக்குடைய இராவணனை அழைத்து, முன்னிலையில் இருத்தி யாழ்மீட்டி வாசித்தார். அப்போது யாழின் இன்னிசையால் பொதியமலை யுருகியது. உடனே வாசிப்பை நிறுத்திவிட்டார். அதனுள் இராவணன் சிக்கிக் கொண்டு துன்புற்றான். இராவணன் அகத்தியரைத் தொழுது வேண்ட மீண்டும் யாழ்வாசித்து அவனை விடுவித்தார்.

“இனியபைந்தமிழின் பொதியமாமலைபோல்
   இசைக் குருகாது”           - சோணசைலமாலை (26)

இதனால் இசைக்குக் கல்லருகும் எனத் தெளிவாகின்றது.