ஆதாரமாகிய மேருமலைபோல் உயர்ந்து வளர்ந்துள்ளதும், சந்தனக்குழம்பு பூச்பெற்றதும், பாரமுடையதுமாகிய கொங்கையை விலைபேசி, பால் சர்க்கரைப்பாகு, தேன் போன்ற இனிய மொழிகளால் எண்ணற்ற மோகத்தைச் செய்கின்ற பொது மகளிரின், அடிமுதல் முடிவரையுள்ள அங்கங்களைச் சிறப்பித்துக் கவிகள் பாடுகின்ற பேயனும், அறிவில்லாதவனும், விவேக முடைய நாக்கு இல்லாத பாவியும், உண்மை யில்லாதவனும் வீண் நாளையகற்றும் அறிவும் தவமும் இல்லாதவனும், உயிரைப்பற்றியும் உலகத்தைப் பற்றியுமே பேசி வியாபாரஞ் செய்கின்றவனும் ஆகிய அடியேன், தேவரீருடைய சிறந்த இரு திருவடிகளின் துகளாகும் பேற்றினைப் பெற்று, நரகில் விழாதவண்ணம் என்னையுடையவரே! உமது திருவருள் புரிவீராக. விரிவுரை பாதாளமாதி லோக நிகிலமு மாதாராமான மேரு:- பாதலம் முதலிய எல்லா உலகங்களுக்கும் மேருமலை ஆதாரமாகி நிற்கின்றது. அந்த உலகங்கள் யாவும் மேருமலையில் கோத்து நிறைபெறுகின்றன. மேரு நடுத்தூண்போல் நிற்கின்றது. “மகாமேரு பறியுண்ண உலகுநிலை குலையும்” - தக்கயாகப்பரணி “மேருத்தூண் ஒன்று நடுநட்டு” - மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் “மேரு நடுநாடி” - திருமந்திரம் மோகமிடுபவா:- பொதுமகளிர் மேருமலை போன்ற தனத்தை விலை கூறியும் பால், பாகு, தேன் பால் இனிக்க இனிக்கப் பேசியும் தம்மை நாடி வந்தவர் சொக்கிப் போகுமாறு மோகிக்கச் செய்வார்கள். பாதாதிகேசமாக வகை வகை கவிபாடும்:- மாதர்களின்பாதம் முதல் கூந்தல் வரையுள்ள அங்கங்களைத் தனித்தனியே வருணித்துக் கவிகள் பாடி புலவர்கள் தாம் கற்ற தமிழை அவமாக்குவர். உதிர்வதும், நரைப்பதுமாகிய கூந்தலை மேகம் என்றும், பாக்கின்பாளையென்றும், கொடிப்பாசியென்றும், பல்வேறு உவகைகளில் கூறுவர். இவ்வாறு கண், நெற்றி, நாசி, காது, பற்கள், இதழ், கழுத்து, முதலிய உறுப்புக்களை விதவிதமாக உவமை கூறிப் பாடுவார்கள். நைடதம் முதலிய நூல்கள் இதற்குச் சான்று. ஞானகீனன்:- ஞானஹீனன்-அறிவற்றவன். இயற்கையாயுள்ள எம்பெருமானைப் பாடாமல், செயற்கை |