சோசை, நோயால் வெளுத்த முகத்தையுடைய விஷமிகள், சூலை, வலிப்பு, வாதம் முதலிய நோய்களுடன் கலப்பவர்கள், பாவிகள், சூதகத்தால் தூய்மை யில்லாதவர்கள், கோள் சொல்லுபவர்கள், நடுத்தெருவில் நின்று காரியஞ் சாதிக்கக் கூடிய வார்த்தைகளைப் பேசி வாருங்கள் என்று ஆடவனை அழைத்துச் சென்று, ஒரு நாழிகைக்கு இந்த உம்பாகிய பாண்டத்திற் இவ்வளவு விலையென்று கூறி, தம் பக்கம் சாயும்படி, மிகுந்த மாயப் பொடியைத் தூவுபவர்கள், சரீரத்தைத் தட்டிக் கொடுப்பவர்கள் ஆகிய பொதுமாதருடைய உறவு ஆகுமோ? (ஆகாது). விரிவுரை சூது கொலைகாரர்:- தம்மைப் பகைப்பவரை வஞ்சனையாகக் கொல்லுபவர்கள், பால் தருவதுபோல் பாசாங்கு செய்து அதில் நஞ்சு கலந்து கொல்லுவர். ஆசை பண மாதர்:- எத்தனைதான் தந்தாலும் திருப்தியடையாது, மேலும் மேலும் கவரும் பணத்தாசை படைத்தவர்கள். தூவையர்கள்:- தூ-மாமிசம்.சதா புலால் உண்பவர்கள். “தூப்போலும் சுவையுடைய சனிபலவுந் தரவல்லேன்” கம்பராமாயணம். நீலர்:- நீலம்-விஷம். விஷகுணம் படைத்தவர்கள். விஷம் உண்டாரை மட்டுங் கொல்லும். இவர்கள் கண்டாரையுங் கொல்லும் கொடிய நஞ்சு போன்றவர்கள். சூலை வலி வாத மோடணைவர்:- சூலை, வலிப்பு, வாதம் முதலிய நோயாளிகளுடனும் சேர்வார்கள். அதனால் அந்த நோய்களையும் பெற்று அவற்றுடன் சேர்ந்திருப்பார்கள். தூமையர்கள்;- தூயமை யில்லாதவர்கள். சூதகத்தில் வேறாயிருக்கும் தன்மை முதலிய இல்லாதவர்கள். கோளர்:- பிறரைப் பற்றிச் சதா கோள் வார்த்தைகள் கூறுபவர்கள். வாருமென நாழி தாழி விலை கூறிதெனவோதி:- நாழிகை என்ற சொல் நாழி என வந்தது. |