பக்கம் எண் :


210 திருப்புகழ் விரிவுரை

 

முருகப் பெருமான் அவரைத் திருக்கரத்தால் தாங்கி உய்வித்து உபதேசித்து அருள்புரிந்தார்.

எனை மனமுருக்கி யோக அநுபூதி யளித்த பாத:-

அருணகிரிநாதருக்கு ஆறுமுகப் பெருமானே குருநாதராகத் தோன்றி அநுபூதி யளித்தருளினார். அநுபூதி - இரண்டற்ற நிலை.

“கந்தரநுபூதி பெற்றுக் கந்தரநுபூதி சொன்ன எந்தை” - தாயுமானார்.

எழுதரிய பச்சைமேனி உமை:-

ஞானமே வடிவாக அம்பிகையைக் கருவி கரணங்களைக் கொண்டு வர்ணங்கள் குழைத்து எழுதிக் காட்ட இயலாது.

கருத்துரை

ஞானமலையுறை ஞானபண்டிதா! முன் அளித்த பாதமலரை மீண்டும் தந்தருள்வீர்.

சென்னிமலை

167

பகலிரவினிற்  றடுமாறா
பதிகுருவெனத்          தெளிபோத
ரகசிய முறைத்   தறுபூதி
ரதநிலை தனைத்       தருவாயே
இகபர மதற்    கிறையோனே
இயலிசையின்முத்       தமிழோனே
சகசிர கிரிப்    பதிவேளே
சரவண பவப்            பெருமாளே.

பதவுரை

இகபரம் அதற்கு இறையோனே-இகம் பரம் என்ற இரு நலன் கட்கும் அதிபரே! இயல் இசையின் முத்தமிழோனே-இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் உரியவரே! சக சிரகிரிபதி வேளே-இந்த வுலகில் உள்ள சென்னிமலையில் வாழும் செவ்வேட் பரமரே! சரவண பவ-சரவணபவத் தெய்வமே! பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! பகல் இரவினில் தடுமாறா- நினைவு, மறப்பு என்ற சகல கேவலத்தில் தடுமாற்றத்தையடையாமல், பதி குரு என தெளி போத-முருகனே குரு என்று தெரிகின்ற ஞானத்தின், ரகசியம் உரைத்து-பரம இரகசியத்தை அடியேனக்கு உபதேசித்து, அநுபூதி ரத நிலைதனை தருவாயே-ஒன்றுபடும் இனிய பேரின்ப நிலையை அருள்புரிவீராக.