சைவநீதியும் சன்மார்க்கமும் விளங்குமாறு உபதேசித்த தன்மையானது சிவபெமானுடைய திருச்செவியில் உபதேசித்தருளிய மறைமுதன் மொழியாகிய மௌ மொழியேயாம்; அங்ஙனம் அடிமையேனுக்கு அருள்புரிய நீல நிறமுடைய மயில்வாகத்தில் ஏறிவந்தருளிய கூர்மை பொருந்திய வேலாயுதக் கடவுளே! ஓதப்பெறுகின்ற வேதங்களும் ஆகமங்களும் கூறுகின்ற சிவயோகத்தைச் செய்து உகாந்த காலத்தையும் உணர்கின்ற தன்மையுடைய பெரியோர்களது வினை தீருமாறு அவர்களுடைய ஊனும் உயிருமாகி வளர்ந்து பிரமநாதத்துடன் பேரின்ப வாழ்வு தந்தருளி ஊதிமலை என்னுந் திருமலை மீது எழுந்தருளிய பெருமிதமுடையவரே! “அடியேன் மிக்க அன்புடன் தேவரீரை யடைய, வேண்டுமென்று வருந்தி “முழுமுதலாகிய செம்பொருட்டலைவரே” என்று துதித்து ஆளுடைய உம்மையே வணங்கி உய்யத் திருவருள்புரிவீர். விரிவுரை ஆதிமகமாயி:- உலகத்தோற்றத்திற்கும். உயிர்கள் உய்தற்கும். அம்பிகையே முதன்மை பெற்றவராதலாலும், மாயையின் முதல்வியாதலாலும் “ஆதிமகமாயி” என்றனர். உனையே வணங்க அருள்வாயே:- முருகவேளையன்றி மறந்து புறந்தொழாத உறுதிழை சுவாமிகள் வற்புறுத்துகின்றார்கள். “உன்னை யொழிய ஒருவரையு நம்புகிலேன் பின்னை யொருவரையான் பின்செல்லேன்” - நக்கீரர். “கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலு நினையாது” - மணிவாசகர். “தேவரே முதலுலகங்கள் யாவையுஞ் சிருட்டியாதிய செய்யும் மூலரே எதிர்வருகினு மதித்திடேன்” - இராமலிங்க அடிகள். பூதமது வானவைந்து பேதமிட வேயலைந்து:- தேவலோகத்துள்ள உடம்பு பூதசாரதநு; நரக லோகத்துள்ள உடம்பு பூததநு; மண்ணுலகத்துள்ள உடம்பு பூத பரிணாமதநு; மண் புனல் தீ காற்று வெளி என்ற ஐம்பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய உடம்பு. “ஐந்துவித மாகின்ற பூதபேதத்தினா லாகின்ற யாக்கை” - தாயுமானார். |