சிறந்த பிரணவ மந்திரத்துக்கு உயிர்நாடி யென்றும் சொல்லத்தக்க ஒளிமய மானவரே! ஒதியமரம் பூத்துக்குலுங்குகையில் மலர்களை யுதிர்க்கின்றதும், பொன்னாபரணம் போன்ற அரிய முத்தி நலனைத் தர வல்லதுமான ஊதிமலையில் உள்ளம் உவந்து உறைகின்ற பெருமிதமுடையவரே! கோதி முடித்த பெரிய கூந்தலையுடையவர்கள்; வஞ்சனை வழிகளுக்கு வழிவகுக்கின்ற பொது மகளிரைக் கூடுவதால் வரும் அற்ப இன்பத்தை மனதில் நினையாமல், திடமில்லாத மனத்தை ஒழித்து, உறுதியான அறிவையும் ஞான குணத்தையுங் கொடுத்து, உமது திருவிளையாடல்களைப் பேசும் இடங்களில் இன்பம் ஊறு அடியேன் நிற்கும்படி திருவருள் புரிவீராக. விரிவுரை அற்பச் சுகத்தை நெஞ்சினில் நினையாதே:- உலக இன்பம் அனைத்தும் அற்பமே யாகும். “தினைத்துணையுள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே” என்கிறார் மாணிக்கவாசகர். உயாந்த அல்வாவானாலும் நுனிநாக்கிலிருந்து அடிய நாக்குப் போம் அளவுதான் சுவை. சில விநாடிகளில் மறையும் இன்பத்தைப் பெரிதாக எண்ணி மாந்தர்கள் மடிகின்றார்கள். கோழை மனத்தைக்கெடுத்து:- கோழை-திடமின்மை. கோழையுள்ளம்-உறுதியில்லாத மனம். இந்தவுலகத்தில் கோழை மனம் படைத்தவர்கள்தான் மிகுதியாக எங்கும் இருக்கின்றார்கள். அதனால் இராமலிங்க அடிகள் “கோழையுலகு” என்று குறிக்கின்றார்கள். வன்புல ஞானகுணத்தைக் கொடுத்து:- புலம்-அறிவு. வன்புலம்-திடஞானம். ஞானமயமான குணம். நின்செயல் கூறுமிடத்துக் கிதத்து நின்றருள் புரிவாயே:- முருகப்பெருமானுடையப் புகழையெடுத்துக் கூறுகின்ற இடத்தில் அன்புடன் இருந்து கேட்டு மகிழவேண்டும். இத்தகைய நலனைத் தருமாறு சுவாமிகள் முருகனிடம் முறையிடுகின்றார். நாத நிலைக்குட் கருத்து கந்தருள் போத:- நாதம்-சிவதத்துவம். அந்த சிவ தத்துவத்துக்குள் கருத்து செல்லும் வண்ணம் உபதேசிக்கும் ஞானதேசிகன் முருகன். நாதம் 36ஆவது தத்துவம். |