அடியார்களின் சீர்பாதத்தூளி சென்னியில் படுமாயின் சகல பாவங்களும், பாநுவைக்கண்ட பனிபோல் நீங்கும். நரகிடை வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே:- குற்றம் புரிந்தோர்சிறைச்சாலை புக அரசாங்கத்தார் தண்டிப்பதுபோல், பாவம் புரிந்தோர் இருள் உலகமாகிய நரகம் புக இறைவனுடைய ஆணை ஒறுக்கும். அசிபத்தியும், கும்பிபாகம், ரௌரவம் முதலிய பல நரகங்கள் உள. தீவினை புரிந்தோர் அவற்றில் சென்று பெருந்துயரங்களை நுகர்வார்கள். இத்தகைய கொடிய நரகில் புகுதாவண்ணம் காத்தருள்வீர் என்று அடிகளார் இறைவனிடம் முறையிடுகின்றார். முராரி:- முரன் என்ற அசுரனைத் திருமால் வதைத்தார். அதனால் முராரி என்று பேர் பெற்றார். வலாரி:- வலன் என்ற அசுரனைத் திருமால் வதைத்தார். அதனால் வலாரி என்று பேர் பெற்றனன். வலன் என்ற அசுரன் தான் இறந்தால் தன் உடல் நவமணிகளாகுமாறு வரம் பெற்றிருந்தான். இந்திரன் அவனை வஞ்சனையால் யாகப் பசுவாகுமாறு செய்து, யாகத்தில் வதைத்தான். யாகத்தில் மறைந்த இவன் உடல் விலையுயர்ந்த இரத்தினங்கள் ஆயின. உதிரம்-மாணிக்கமாயிற்று பற்கள்-முத்துக்களாயின மயிர்கள்-வைடூரியங்களாயின எலும்புகள்-வைரங்களாயின பித்தம்-மரகதமாயிற்று மாமிசம்-கோமேதகமாயிற்று தசைகள்-பவளமாயின கண்கள்-நீலமாயின கபம்-புஷ்பராகமாயிற்று சோமாசிமார்:- சோமசிமார்-சோமயாகஞ்செய்பவர்கள். வேதாமங்களில் விதித்தவாறு சிவயாகங்களை நியம நியதியுடன் செய்கின்ற மறையோர். சோமாசி- சோமயாசியெனப் பேர் பெறுவர். |