பாய்கின்ற குருடிமலையில் உறைகின்ற முருகக் கடவுளே! சிறந்த வடக்கில் நின்ற கிரவுஞ் மலை தவிடு பொடியாகும்படி மயிலில் ஏறிவந்த குமாரக் கடவுளே! குருபரரே! அஞ்ஞான இருளை யகற்றும் ஞானபானுவே! குறைவில்லாத அமரர்கள் போற்றும் பெருமிதமுடையவரே! கருடன் மீது வருகின்ற கரிய மேகவண்ணராம் திருமால் நீ என்றும், பதுமநிதி என்றும், சிந்தாமணி என்றும் புகழ்ந்து உலகத்தவரைச் சத்தமிட்டுப்பாடி, அப்பாடலில் அவர் பெயர்களை நுழைத்து, மனத்தில் பொருளை நாடி, முன்னுள்ள பழைய நூல்களில் உள்ள சொற்களைத் திருடி ஒரு படியளவு திரித்து அமைத்து, அறிவில்லாதவர்களின் காதில் நுழையும்படி கவிகளைப் பாடித்திரிகின்ற சில புலவர்கள் கூறும் நெறியை அடியேன் அறியேன். (அதில் செல்ல மாட்டேன்). விரிவுரை கருடன்மிசைவரு கரிய புயலென:- கருடன் காசிபருக்கும் விநதைக்கும் பிறந்தவன். பறவையரசன். திருமாலுக்கு வாகனமும் கொடியுமாக இருப்பவர்கள். கருடன் மீது வந்து அடியார்க்கு அருள்புரியும் நீலமேக வண்ணர் திருமால். இத்தகைய திருமால் தான் நீ என்று புலவர் மனிதரைப் புகழ்ந்து பாடுவார்கள். கமல மணியென:- கமலம்-பதுமநிதி. தாமரை வடிவில் இருக்கும் ஒரு நிதி. இது வேண்டுவார்க்கு வேண்டிய அளவு நிதி சொரியும். உலகோரைகதறி:- உலகிலுள்ள தனவந்தர்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து சத்தம் போட்டுப் பாடுவர். அவர் பெயர் செருகி:- பழைய பாடல்களில் இவர் பேரைச் செருகிப் பாடுவர். முதுமொழிகளை நாடித்திருடி யொருபடி நெருடி:- பழைய நூல்களில் முன்னோர்கள் பாடிய பாடல்களில் உள்ள இனிய அரிய சொற்களைத் திருடி, நிரம்பத் தாங்கள் பாடும் பாடல்களில் நுழைத்தும் பாடுவர். சிலபுலவர் மொழிவது சிறிது முணர் வகை யறியேனே:- இத்தகைய சில புலவர்கள் செயலை ஒரு போதும் அடியேன் மேற்கொள்ள மாட்டேன் என்று சுவாமிகள் முருகனிடம் மொழிகின்றார். |