(நீராடுகின்ற) கோபிகைகன்னிகளின் சீலைகளை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறிக்கொண்டும் திருவிளையாடல் புரிந்த அழகிய நாராயணமூர்த்தியின் திருமருகரே! பிரமதேவரும் திகைக்குமாறு போர்க்களத்திற் சென்று, பொருந்தியுள்ள தேவர்களுடைய சிறை மீளும்படி, அசுரர்களை வதைத்து, ஒருமையுடைய அடியார்கள் தொழ, தென்சேரிகிரியால் வந்தமர்ந்த பெருமிதமுடையவரே! எவ்விடத்திலேனும் ஒரு மனிதம் வந்தால் அவ்விடத்தில் அவனைக் கண்வலை வீசிப்பிடித்து, “இங்கே உம்மைக் கண்டால் யார்தான் மோகத்தால் மயங்க மாட்டார்கள்? உமது அழகு யாரையும் மயங்கச் செய்யும்” என்று சொல்லி, “எனது இனிமையான இதழ்க்கனி இந்தா பெற்றுக் கொள்ளுங்கள்; இதழைத் தந்த என்னைக் கட்டியணைக்க வாருங்கங்கள்” என்று விரக வார்த்தைகளைக் கூறி ஆசையை மூட்டி, அவ்வாசையால் உடலையும், உள்ளத்தையும் உருக்கி, இரு கண்களையும், கீழும் மேலும்புரட்டி, அவர்கள் வலைப்பட்ட ஆடவர்களுக்கு உடைய பொருள்களையும், அவர்கள் உயிரையும், சிறிதும் சந்தேகமின்றிப் பறித்துக்கொள்ளும் விலைமகளிருடைய, சங்கீதப் பாடலோடு கூடிய கலவி இன்பமாகிய பெருங்கடலை விட்டுக் கரையேறியுய்ய, தேவரீருடைய தட்பமிக்க திருவருளைத் தந்து ஆட்கொண்டருள்வீர். விரிவுரை எங்கேனு மொருவர் வர:- விலைமகளிர், வீதியோ, சந்தியோ, மற்ற எவ்விடமாயினும் எதிர்ப்பட்ட ஆடவரை விழிவலை வீசி மயக்குவர். இங்கேவ ருனதுமயல்.......................................மருவ:- தம் வசப்பட்ட ஆடவர்கள் மீண்டும் செல்லாவண்ணம், “நீங்கள் மிகவும் தாராள சிந்தனையுடையவர். கர்ணனும் தங்களைக் கண்டால் நாணித்தலைகவிழ்ப்பான். தங்கள் அழகைக் கண்டு மன்மதனும் வெந்து நீறானான். ஆடவர்கள் தங்களைக் கண்டால் அவாவுகின்றரென்றால் பெண்ணாகப் பிறந்தவர் யார்தான் தங்கள் கட்டழகைக் கண்டால் மயங்கமாட்டார்கள்? என் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட உத்தம! விரைந்து என்னைத் தழுவும்; விரகதாபத்தால் வெதும்புகின்ற என்னை நீர் தழுவவில்லை யென்றால் என் உயிர் நீங்கிவிடும்” என்று பசப்பு மொழிகளைக் கூறி அவர் மனத்தைக் கவர்ந்து மீளா நரகுக்கு ஆளாக்குவர். |