அவருடைய உண்டான பொருளுயிர்கள்.............பறிகொளுமானார்;- விலைமகளிர் தம் வலைப்பட்டோருடைய பூமி வீடு மாடு பொன் ஆடை ஆபரணம் முதலிய யாவற்றையும் பறித்துக் கொள்வதோடு அமையாது, அவருடைய உயிர்க்கும் உலைவைத்துவிடுவர். “உயிரீர்வார் மேல்வீழ்ந்து தோயுந்தூர்த்தன்” “மனமுடனே பறிப்பவர்கள்” - (குமரகுருபரமுருககுகனே) திருப்புகழ். விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற நாடின் வேறல்ல-விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே யறுமே அவரன்பும் கையற்ற கண்ணேயறும். - நாடியார். கலவி நலம் என்றேகுமுததி:- மாதர் மயக்கம் ஒரு பெருங்கடல். கடலைக் கடப்பது எத்துணையரியதோ அதேபோலும் மாதராசையைத் தவிர்ப்பதும். கலையறிவாலும் முயற்சியாலும் பிற சாதனங்களாலும் அதை அறவே நீக்கமுடியாது. நீக்கினும் பிறது ஒரு சமயம் அது சிறிது தலை நீட்டும். எந்தை கந்தவேள் திருவருட் பலம் ஒன்றாலே பிறவிகடோறும் தொடர்ந்து வரும் பெண்ணாசை முற்றிலும் நீங்கி யுய்யலாம். அதுதான் அருணகிரிநாதர் காட்டிய செந்நெறி. கடலில் நீர்பாம்பு, சங்கு, பவளம், அல்குற்படமும், நீர்ச்சுழி; மலைகள் முதலிய இருக்கும், காமக்கடலிலும், அல்குற்படமும், கழுத்தாகிய சங்கும், உந்தியாகிய நீர்ச்சுழியும், தனமாகிய மலையும் இருந்து இடர் செய்யும் என்பதை கந்தலங்காரம் 29ஆவது பாடலில் உபதேசிப்பதைப் பலமுறை படித்து உண்மையுணர்ந்து உய்யுநெறி பெற்று உலகம் இன்புறுக. சந்தாரும் வெதிருகுழல்:- மூங்கிலால் செய்யப்படும் இசைக்கருவி; புல்லாங்குழல் என்பர். தோற்கருவி, தொளைக்கருவி, நரம்புக்கருவி, சஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி, என்று ஐங்கருவிகளுள், புல்லாங்குழல் தொளைக் கருவியாம். புல்லாங்குழல், கருங்காலி, சந்தனம், செங்காலி, வெண்கலம் முதலியவைகளாற் செய்யப்படுமாயினும் உத்தமம் மூங்கிலே. இதன் விளக்கத்தைத் திருப்புகழ் விரிவுரை 2ஆம் தொகுதி களபமொழுதிய என்ற பாடலின் விரிவுரையில் பார்க்கவும். |