பக்கம் எண் :


228 திருப்புகழ் விரிவுரை

 

பண்டு, ஆட சிங்கி இடும் அவர்-பழமைபோல் பேசி வசப்படுத்துகின்ற பொது மாதர்களின், விண்டு ஆலிக்கின்ற-வாய்விட்டுக் கூவுகின்ற, மயில் அன பண்பால்-மயில் போன்ற நடிப்பினால் இட்டம் செல் மருள் அது விடுமாறு- என்விருப்பம் அவர்பால் செல்லுகின்ற மயக்கமானது நீங்கும்படி, பண்டே சொல்தந்த பழமறை கொண்டே-பழமையான சொற்கள் அமைந்த வேத மொழியைக் கொண்டு, தர்க்கங்கள் அற-தருக்க வாதங்கட்கு இடமில்லாதபடித் தெளிவாக, உமைபங்காளர்க்கு அன்று பகர்-உமா சமேதராகிய சிவமூர்த்திக்கு அந்நாள் உபதேசித்த, பொருள் அருள்வாயே-பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வீராக.

பொழிப்புரை

வண்டுகள்களித்து விளையாடத் தென்றல் காற்று வீசும் குளத்தை நீங்காது அங்குள்ள தாமரை மலர்கள் வாடாவண்ணம் அவற்றிடம் போய்த் தேனைப் பருகும் வயலூர் ஆண்டவரே! வலிய கரிய மேகத்தின் வடிவுடையவரும், போரில் எண்ணமுள்ள கம்சன் இறந்து விழத்தாக்கி உதைத்து வாதாடியவரும் ஆகிய கண்ணபிரானுடைய திருமருகரே! அசுரர்கள் சிதறுண்டு திண்டாடவும், சில் அடிமைகளாகவும் போர் புரிந்த ஆறுமுகக் கடவுளே! சிவந்த சேவலைச் செங்கரத்தில் ஏந்தியவரே! அழகிய மதிலின் அலங்காரம் கொண்டதாய், சந்திரனுடைய, கலை தவழுகின்றதாய் விளங்கும் தென்சேரி மலையில் மகிழ்ந்து வாழும் பெருமிதமுடையவரே! சிறப்பித்துப் பேசிக் கொஞ்சுகின்ற மொழிகளைக்கொண்டும், தம்மைக் கண்டவர்களின் உள்ளத்தை வெட்டியழிப்பது போன்ற விழிகளைக் கொண்டும், பூங்கொத்துக்களை முடித்த கூந்தலைக் கொண்டும், வட மேருமலைக்கு ஒப்பான தனங்களைக் கொண்டும், சபா மண்டபத்தில் கொலு வீற்றிருப்பது போன்ற நிலைகொண்டும், பலருடனும் பழைய நட்புபோல் பழகி வசப்படுவதும் பொது மாதர்களின் வாய்விட்டுக் கூவுகின்ற மயில்போன்ற நடிப்பால், அடியேனுடைய விருப்பம் அவர்பால் செல்லும் மயக்கமானது நீங்குமாறு, பழமையான சொற்கள் அமைந்த பழைய வேதமொழியை கொண்டு, தருக்க வாதங்களுக்கு இடமில்லாத படி தெளிவாக, உமா நாதருக்கு உபதேசித்தருளிய பொருளை எனக்கு அருள்புரிவீராக.

விரிவுரை

இத் திருப்புகழில் முதற்பகுதி விலைமாதர்களின் இயல்புகைக் கூறுகின்றது.