உமைபங்காளற் கன்று பகர் பொருள் அருள்வாயே:- உமையொரு கூறுடைய சிவபிரானுக்கு உபதேசித்த ஓம் என்னும் ஒரு மொழிப் பொருளை அடியேனுக்கு உபதேசித்தருள்வீர் என்று அருணகிரிநாதர் இந்த அடியில் விண்ணப்பம் புரிகின்றார். அதுபடியே ஆண்டவன் அவருக்கு உபதேசித்தருளினார். “எட்டரண்டு மறியாத என் செவியில் எட்டிரண்டு மிதுவா மிலிங்கமென எட்டிரண்டும் வெளியா மொழிந்தகுரு முருகோனே” - (கட்டிமுண்டக) திருப்புகழ். புண்டரிகமலர் மங்காமற் சென்று மதுவை செய்:- வண்டுகள் சென்று தாமரை. மலர்கள் வாடாமல் அத்துணை மெல்லச் சென்று அவற்றில் உள்ள தேனைப் பருகுகின்றன. அதுபோல யாசகர்கள் கொடுக்கின்வர் அகமும் புறமும் கோணாவண்ணம் சென்று யாசிக்க வேண்டும். கஞ்சன் விழவுதை:- கஞ்சன்-கம்சன். இவன் கண்ணபிரானுக்கு நேர் தாய்மாமன் அன்று. புனர்வசு என்பானுடைய மகன் ஆகுகன். ஆகுகனுடைய மக்கள் இருவர். தேவகன், உக்ரசேனன், தேவகனுடைய மகள் தேவகி. உக்ரசேனனுடைய மகன் கம்சன். கம்சனுக்குப் பெரிய தகப்பன் மகள் தேவகி. தேவகியின் உடன் பிறந்த சகோதரிகள் அறுவர்; திருத்தேவா, சாந்திதேவா, உபதேவா, ஸ்ரீதேவா, தேவரக்ஷிதா, சகதேவா, தேவகியின் மக்கள்; கிரதிவந்தனன், சுனேஷணன், பத்திரசேனன், ருசு, சமந்தன், பத்திராக்கன், சங்கர்ஷன், கிருஷ்ணன், சுபத்திரை. கம்சன் கண்ணனைப் பலமுறை கொல்ல முயன்றான். கிருஷ்ணர் அவனுடைய மதயானையாகிய குவலயா பீடம் என்ற யானையைக் கொன்று அதன் கொம்பை இடித்து, கம்சனை வதைத்து அருளினார். தென்சேரிகிரி:- திருப்பூரிலிருந்து பொள்ளாச்சிக்கு போகும் பஸ் மூலம் 22கல் சென்று சுல்தான் பேட்டையில் இறங்கி உடுமலைப் பேட்டைக்குப் போகும் பஸ்ஸில் ஏறி நான்கு கல் சென்றால் இத்தலத்தையடையலாம். அழகிய மலை. கருத்துரை |