பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 23

 

சோமயாகம்-தேவர்பொருட்டுச்சோமரசம் அளிக்கும் வேள்வி.

சோமம்-யாகங்களில்தேவதைகளுக்கு நிவேதித்துப் பின்பருதற்குரிய இரசம் சித்தஞ்செய்யுங்கொடி.

பெரிய புராணத்தில்சோமாசிமாற நாயனார் என்று ஒருவர் இருந்தார் என்பது உலககறிந்த உண்மை.

கூதாளம்:-

கூதளம் என்பது ஒரு மலர். சங்குபோன்ற வடிவுடன் இருக்கும். “கூதாள கிராத குலிக்கு இறைவா” என்று அநுபூதியிலும் கூறியுள்ளார்.

நாகம்:-

நாகம் - சுரபுன்னை.

சாதாரி:-

சாதாரி என்ற பண் இப்போது காமவர்த்தனி யென்று வழங்குகின்றது. காமவர்த்தனியை இப்போது பந்துவராளி என்று பிழைபடக் கூறுகின்றார்கள்.

தேசி:-

தேசி என்பது ஒருவகை இராகம்.

நாதநாமக்ரியா:-

இது நிஷாதாந்தராகம்.மாயாமாளவ கௌளையில் பிறந்தது.

கூராரல் தேரு நாரை:-

கூர் - மிகுதி; ஆரல் - ஒரு வகை மீன். நாரை என்ற பறவை வெள்ளியசிறகையும், பசிய காலையும் சிவந்த வாயையும் உடையது.

இது ஆரல்மீனையும், கொண்டை மீனையும், நெற்கதிர்களையும் உண்ணும்.

கோனாடு:-

“பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே” - திருஞானசம்பந்தர்

“ஆரல் அருந்த வயிற்ற நாரை”  - குறுந்தொகை

எறும்பீசர் மலைக்கு மேற்கு; மதிற்கறைக்குக் கிழக்கு; காவிரி நதிக்குத் தெற்கு; பிரான் மலைக்கு வடக்கு. இந்த நான்கு எல்லைக்கு உட்பட்டது கோனாடு என்று கொங்கு மண்டல சதகம் கூறுகின்றன.

கருத்துரை

விராலிமலையுறை வேலவரே! அடியேன் நரகில் விழாத வண்ணம் அருள்புரிவீர்.