வளர்ச்சியடைகின்ற மிகுந்த மகிழ்ச்சியை அருள் புரிவீர்; அரசர்கள் இரவும் பகலும் உயிர்களை இனிது புரந்து சிவநெறி சார்ந்து உய்ய நல்லறிவைத் தந்தருள்வீர்; கொங்குநாட்டில் அவிநாசியில் ஏரிக்குத் தென்கரையில், சுந்தமூர்த்தியினால், சிவபெருமான் திருவருள் துணைகொண்டு, முதலைவாய்ப்பட்ட மகன் உயிர் பெற்று உடம்புடன் வெளிப்பட்ட திருவருட் செல்வத்தை அருள்புரிவீராக. விரிவுரை ஐங்கரனை யொத்தமனம்:- விநாயகர் ஐந்து கரங்களால் ஐம்பெருந் தொழில்களை யாற்றுவதுபோல், மனம் ஐம்புலன்களால் உலக விவகாரத்தை நடத்துகின்றது என்பது ஒருவர் உரை. அன்றியும் ஐங்கரன் என்பதற்கு யானை என்று பொருள் கொண்டு, யானை இடையறாது அசைந்து கொண்டே இருப்பதுபோல் மனம் அசைந்து கொண்டிருக்கின்றது என்பது வேறு ஒருவர் உரை. அன்றியும், ஐங்கரன் என்பதற்கு யானை என்று பொருள் கொள்வது பொருந்தாது. வேறு எந்த இடத்திலும் அப்படி நூல் வழக்கில் காணப்படவில்லை. மனதை யானையாக சங்கரர் சிவானந்த லஹரியில் உருவகம் பண்ணி யிருக்கின்றார். எனினும் ஐங்கரன் என்பதற்று ஐந்து கரங்களையுடையவன் என்பதே பொருள். இனி ஐங்கரமுடைய கணேசமூர்த்தி எல்லாக் காரியங்கட்கு முற்பட்டு நிற்பவர். அவரின்றி ஒரு கருமமும் நிகழாது. அதுபோல் மனமும் எல்லாக் கருமங்கட்கும் முற்பட்டு நிற்பது. மனமின்றி ஒரு கருமமும் நிகாழது. “தேவரனையர் கயவர்” என்று இழிவு சிறப்பாகக் கூறியதுபோல் இம்மூடமனமும் முன்னிற்கின்றது என்று மிக நயமும் அதிசயமும் உண்டாக சுவாமிகள் உரைக்குந்திறனை உன்னுந்தோறும் உவகை ஊற்றெடுக்கின்றது? அந்திபகலற்ற நினைவு:- அந்தி-மறப்பு, பகல்-நினைவு. இவற்றை வடநூலார் கேவல சகலம்என்பர். இரவு பகலற்று நிற்கு நிலைதான் சிறந்த நிலை. அதனை அருணகிரியார் பல இடங்களில் இனிது பேசுகின்றார். அந்நிலையைடைய ஒவ்வொருவரும் பெரிதும் முயற்சிக்க வேண்டும். அது நினைவும் மறதியும் இல்லாத நடுநிலை. “அந்திபக லென்றிரண்டையு மொழித்து” - (அந்தகன்வருக) திருப்புகழ் “இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” (103) |