“அல்லும் பகலுமில்லாச் சூதானதற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப் போதாய்இனிமனமே தெரியாதொரு பூதர்க்குமே” - அலங்காரம் (17) “கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள்வனசந் தரவென் றிசைவாய்” அநுபூதி (21) இரவுபக லற்றவிடத் தேகாந்த யோகம் வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே. - தாயுமானார். அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ்:- செந்தமிழ் செம்மைப் பண்புடையது. ஏனைய மொழிகளைப் போல் தேய்ந்தும் இறந்தும் உருமாறியும் சிதைந்தும் போகாமல் என்றும் நின்று வளர்கின்ற மொழி தமிழ். “என்றுமுள தென்றமிழ் இயம்பு இசைகொண்டான்”- தாயுமானார். அன்பொடு துதிக்கமனம் அருள்வாயே:- செந்தமிழ்பாடல்களால் செம்மேனி எம்மானை எம்புருகிக் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி‘ துதிக்க வேண்டும். என்பே விறகா இறைச்சி யறுத்திட்டு பொன்போன் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போடுருகி யகங்குழைவார்க் கன்றி என்பேன் மணியினை யெய்த வொண்ணாதே - திருமந்திரம் (272) சந்திர வெளிக்கு வழி:- ஆநாதாரமுங்கடந்து, பிரமந்திரமுந் தாண்டி சந்திர மண்டலமாகிய அமுத மண்டலத்துடன் கூடிய மேலைவெளி. “நாமமதி மீதி லூறுங்கலா இன்ப அமுதூறல் நாடிய யதன்மீது போய்நின்ற ஆனந்த மேலைவெளியேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே” (மூளும்வினை) திருப்புகழ். தண்டிகை.............................அருள்வாயே:- பல்லக்கு பெருமை முதலியன விரும்பும் ஆன்மாக்களும், அவற்றை இறைவனிடங் கேட்டு உய்யும் பொருட்டு விருப்புவெறுப்பற்ற சுவாமிகள் இங்ஙன் கூறியருளினார்கள். மண்டலிகர்.........................அருள்வாயே:- மன்னர்கள் மன்னுயிரை இனிது அறநெறி வழுவாது புரந்துய்யுமாறு வேண்டுகின்றார். “வேந்தனும்ஓங்குக” |