ஆட்டுத் தலையைக் கொடுத்து, சரஸ்வதிக்கு அங்கப்பழுது உண்டாக்கிய உமாபதியாகிய சிவபெருமானுடைய, திருக்குமாரரே! வாழ்க அந்தணர் என்ற திருப்பாசுரம் எழுதிய சிட்டை வையை யாற்றில் எதிரேறுமாறு செய்தும், நெருப்பில் இட்ட ஏடு பச்சென்றிருக்குமாறு செய்தும், சமணர்களைச் சினந்து கழுவிலேறு மாறும் செய்தருளிய குருநாதரே! தூயவரே! என் மனம் விருப்புடன் உம்மை ஏத்தும் படி நீர் திருவருள் பார்வையால் பார்த்தருளுக. தீர்த்தமலை நகரில் காவல் புரிந்து தெய்வயானைக்கு உகந்திருக்கும் பெருமிதம் உடையவரே! ஏ மனமே! மேலே கண்ட பாட்டில் நீ உருகுகின்றாயில்லை; அப்பாடலைக் கேட்டும் உருகின்றாயில்லை; இயமன் வரும் வழியை பார்த்தும் உருகின்றாயில்லை; நாள்தோறும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமான் அருளும் முத்தியின்பத்தை விரும்புகின்ற யில்லை; பாழும் பிறப்புகளிலேயே ஈடுபடுகின்ற உடம்பாகிய கூட்டை விடுகின்றாயில்லை; ஏட்டில் எழுதியுள்ள விதி வழி வாழ்க்கையின் ஓட்டம் என்பதை யறிகின்றாயில்லை; உனது போக்கை நான் பார்த்து, இனி ஒரு நல்மொழி கூறுகின்றேன். இதைக்கேள்; முருகனைப் புகழ்ந்து ஏத்த நல்லவாக்கும் உயர்ந்த உள்ளமும் அருளுவான்; அடியார்க்கு எளியனும் வாழ்த்தும் அடியவருடைய இருவினைகளை நீக்குபவனுமாகிய முருகனை நீ சேர்ந்து உய்ய மாட்டாயோ? விரிவுரை இத்திருப்புகழ் மனதை முன்னிலையாக்கிப் பாடியது, “அந்தோ மனமே” என்ற திருச்சிராப்பள்ளி திருப்புகழும் இது போன்றது. பாட்டிலுருகிலை:- முருகப் பெருமானுடைய அருட்புகழ் நிறைந்த பாடல்களைப் பாடி மனம் உருக வேண்டும். கேட்டுமுருகிலை:- பாடி உருகும் ஆற்றல் இல்லையாயினும், பிறர் பாடக்கேட்டாவது உள்ளம் உருக வேண்டும். இன்னிசைப்பாடல் கல்லையும் இரும்பையும் உருக்கும். கூற்று வருவழி பார்த்து முருகிலை:- உடல்வேறு உயிர்வேறாகக் கூறுபடுத்துகின்றவன் கூற்றுவன்; இந்த இயமன் வருகின்ற வழியைப் பார்த்தாவது மனம் உருக வேண்டாமோ? |