பக்கம் எண் :


238 திருப்புகழ் விரிவுரை

 

பாட்டை யநுதினம் ஏற்றுமறிகிலை:-

பாடு-துன்பம். தினந்தினம் ஆன்மா நுகர்நின்ற துன்பங்களைப் பார்த்தாவது மனம் உருகவேண்டும்.

பாப்பணிய னருள் வீட்டை விழைகிலை:-

பாம்பு என்ற சொல் பாப்பு என வந்தது. தாருக வனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து பெருமானைக் கொல்லும் பொருட்டுக் கொடிய பாம்புகளை யேவினார்கள். அவற்றை அரனார் ஆபரணமாக அணிந்து கொண்டருளினார்.

வீம்புடைய வன்முனிவர் வேள்வி செய்து விட்டகொடும்
பாம்பனைத்துந் தோள்மேல் பரித்தனையே     - திருவருட்பா.

கொல்ல வந்த பாம்புக்கும் அருள்புரிந்த எம்பிரான், வழிப்பட்டாருக்கு எத்துணை அருள்புரிவார். இதற்கு கருணை கடலாகிய சிவபெருமான் அருள்புரிகின்ற முத்தி வீட்டை மனமே! நீ விரும்பவில்லையே!

நாக்கினுனிகொடு ஏத்த அறிகிலை:-

இறைவன் மனிதனுக்கு மெல்லிய நாவினைக் கொடுத்தார். நாக்கை நரம்பில்லாமலும் படைத்தருளினார். நரம்புள்ள பகுதிகள் சுளுக்கும். கை கால் கழுத்து இவை சுளுக்கின்றன. நாவில் நரம்பு இருந்தால் அடிக்கடி சுளுக்கிக் கொள்ளும். பேச்சுத் தடைப்படும். அற்புதமான கருவி நாக்கு. அந்த நாவால் இறைவனைப் பாடிப்பரவுதல் வேண்டும்.

“நாக்கைக் கொண்டான் நாமமம் நவில்கிலார்”        - அப்பர்.

“நாமேல்நடவீர் நடவீர் இனியே”        - கந்தரநுபூதி (17)

பாழ்த்த பிறவிலேற்ற மனது:-

மனது-மனதே! பாழும் பிறவிச் சுழலிலேயே நீ உழல்கின்றனையே? பிறவிக்கு ஏதுவான ஆசையை விடவில்லையே?

நல்வழி போகமாட்ட மெனுகிறை:-

நல்ல வழியிலே போக மாட்டேன் என்கிறது. நீர் பள்ளத்தை நாடிச் செல்வது போல் மனம் பாவச் செயல்களையே நாடுகின்றது.

கூட்டை விடுகிலை:-

கூடு-இந்த உடம்பு.

“கூடு கொண்டுழல்வேனை”             - (மூலமந்) திருப்புகழ்.

இந்த உடம்பு ஒரு சிறைச்சாலை., அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டப்பட்டு ஆன்மா இதில் உறைகின்றது.