என்று எண்ணினார்கள். அந்த எண்ணத்தை அறிந்த அரசனார், “நமக்கு வில்லுந்தேரும் வேண்டுமோ?” என்று திருவுளம் பற்றிச்சிறிது புன்னகை பூத்தார். அச்சிரிப்பிலிருந்து எழுந்த ஒரு நெருப்புப்பொறி முப்புரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கியது. மறலியினாட்ட மற சரணீட்டி:- மார்கண்டேயருடைய வாழ்நாள் முடிவுபெற்றது. அன்று அவருடைய உயிரைப் பற்றவந்த இயமனை இறைவர் தமது இடப்பாதக் கொழுந்தால் உதைத்து அருளினார். நீற்றினை நிறையப்பூசி நித்தலும் நியமஞ் செய்தே ஆற்றுநீர்பூரித் தாட்டும் அந்தணர் உயிரைக் காய்வான் சாற்றுநாள்அற்ற தென்று தருமராஜர்க்காய் வந்த கூற்றினைக்குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே. - அப்பர். மதனுடல் திருநீறாயாக்கி:- திரிபுரத்தைச் சிரித்து எரித்தார். மன்மதனைப் பார்த்து எரித்தார். மகமதைவீட்டி:- தக்கன் சிவநித்தையுடன் செய்த வேள்வியைச் சிவபெருமான் வீரபத்திரை யேவி அழித்தருளினார். ஒருவனை ஆட்டின் முகமதை நாட்டி:- சிவபெருமானா? அவர் கடவுளா? என்று தலையையாட்டிய தக்கனுக் எப்போதும் தலையையாட்டிக் கொண்டேயிருக்கின்ற ஆட்டு முகத்தைக் கொடுத்தார். ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி யுந்தீபற. - திருவாசகம். மறைமகளார்க்கும் வடுவுற:- சரஸ்வதியின் மூக்கைக் கொய்து வடுப்படுத்தினார். சீட்டை யெழுதி வையாற்றி லெதிருற:- திருஞானசம்பந்தர் சமணர்களுடன் மதுரையில் புனல்வாதஞ் செய்தபோது “வாழ்க அந்தணர்” என்று திருப்பாசுரத்தை எழுதிய ஏட்டை வையையாற்றில் விட்டருளினார். அவர் விடுத்த ஏடு நீரில் எதிர் ஏறிச் சென்றது. சமணர்கள் ஏடு கடலை நோக்கி ஓடியது. அழல்பசைகாட்டி:- அனல் வாதஞ் செய்தபோது, “போகமார்த்த” என்ற திருநள்ளாற்றுத் திருப்பதி ஏட்டை நெருப்பில் இட்டபோது அந்த ஏடு வேகாமல் பச்சென்றிருந்தது. |