அக்காட்சியில் பொருந்தி, அகம் மேவும் படர்கள் முழுவதும் அகன்று-என் மனதில் உள்ள துயர்கள் முழுமையும் நீங்கப் பெற்று, உள் பரிவினொடு துதி புகன்று-உள்ளன்புடன் உம்மைத் துதி செய்து, எல்லபதயுகள மிசை வணஞ்கறது அருள்வாயே!ஒளி பொருந்திய இரு திருவடிகளின் மீது வணங்குதற்று அருள்புரிவீராக. பொழிப்புரை போரில் விலகிப் பின்வாங்கிய அசுரர்கள் மாயவும், சிறந்த மலைகள் நடுநடுங்கவும் சிலுசிலு என்று அலைகடல் கலங்கவும், உறுதியுள்ளதும், வெற்றியைத் தருவதும், மலர் போன்ற திருக்கரத்தில் விளங்குவதும், கூர்மையுடையதுமாகிய சத்திவேலை விடுத்தருளிய பெருமை வாய்ந்த இளம்பூரணரே! கருணை பொழியும் அருளே முந்துவதால் அன்புடன் பார்வதி தேவி கொஞ்சி நிற்க, கலகல என்று தண்டை ஒலிக்க வருகின்ற கடம்பு அணிகின்ற திருமார்பினரே! யானைமுகக் கடவுளைத் தமையனாராகப் பெற்ற இளைய குமாரரே! அழகுடன் கனககிரியில் விளங்க வீற்றிருக்கும் கந்தவேளே! பெருமித முடையவரே! மாதர்களைத் தொடர்ந்து செல்லும் சிற்றின்பத்து, உலக நெறியில் மிகவும் மருட்சி கொண்டு, அசடன் எனப்பிறர் கூற என்மனம் வேதனைப்பட்டுச் சோர்வு அடையாமல், தினந்தோறும் களிப்பு மிகுந்து, சுகவழியிலேயே விருப்பங்கொண்டு நடந்து, பாவவழியிற் செல்ல விரும்பும் ஒரு புத்தியை நீக்க மாட்டேனோ? சூரிய சந்திர ஒளிகள் நிறைந்தது போல் விளங்கும், தூய உமது திருமுகங்களைத் தரிசித்து, அக்காட்சியில் ஒன்றுபட்டு, என் மனதில் உள்ள துயர் அனைத்தும் நீங்கப் பெற்று உள்ளன்புடன் தேவரீரைத் துதித்து, ஒளிபொருந்திய உமது இருதிருவடிகளின் மீது வணங்குமாறு அருள்புரிவீராக. விரிவுரை அரிவையர்கள் தொடருமின்பத்துலகு:- இந்த உலகம் பெண்களால் வரும் சிறிய இன்பத்தையே நாடியுழல்கின்றது. சுகநெறியை விழைவு கொண்டிட்டு:- அற்ப சுகத்தைப் பெறுகின்ற வழியையே விரும்பி அலைகின்றார்கள் மாந்தர்கள். அவநெறியின் விழையும் ஒன்றை:- பயன் இல்லாத வழியை விழைவது பேதைமை. |