பக்கம் எண் :


248 திருப்புகழ் விரிவுரை

 

புனமுருக்கு மரங்களும், அழகிய வாழை மரங்களும், கோடிக் கணக்காகத்திகழும் சோலைகளும், அழகிய குளங்களும், உலவித்திரியும் கோம்பை நாய்களும் திகழும் பூம்பறையில் எழுந்தருளியுள்ள, பெருமிதம் உடையவரே! மாந்தளிர்கள் போன்ற அழகிய தோலால் மூடப்பட்ட உடம்புடைய பொது மாதர்கள், பந்துக்கள் முறையில் அத்தான்! மாமா! என்று அழைத்து, விருப்பம் பெருக மோக சாந்தியைத்தர அவர்களை நாடி, அவர்களின் வீடுகளைத் தேடிச்சென்று உறவாடி, உயர்ந்த தனங்களின்மீது சந்தனம் முதலிய நறுமணங்கள் பூசி, இளைத்த இடை வருந்த அவர்களுடன் விளையாடி, இம்சையும் வெட்கமும் இல்லாமல் பொருந்திய அவ்விலை மாதர்களின் உறவு ஆகுமோ-ஆகாது.

மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்:-

பெண்களின் உடல் மாந்தளிர்போல் பளபளப்பாகவும், சிவப்பாகவும், அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.

வாந்தவியமாக முறைபேசி:-

பாந்தவ்யம் என்ற சொல் வாந்தவ்யிம் என வந்தது. பாந்தவ்யம். உறவுமுறை பந்துக்கள் போல் “அத்தான்! வாருங்கள்!” “மாமா வருங்கள்” என்று கூறி அவர்கள் அழைத்து உபசரிப்பார்கள்.

“அத்தானெனக் காசைக் கூட்டித் தயங்க
வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து
அக்காலொருக்கால மேக்கற்றிருந்தி ரிலையாசை”
                                              -(அச்சா) திருப்புகழ்.

ஈங்கிசை மேவ:-

ஈங்கிசை-இம்சை.

“ஈங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள்”     - (கூந்தல்) திருப்புகழ்.

லாஞ்சைனயிலாமல்:-

லாஞ்சனை-லஜ்ஜை-வெட்கம். செய்யத்தகாத காரியத்தில் ஈடுபடுவதில் மனிதனுக்கு நாணம் இருக்க வேண்டும்.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்             - திருக்குறள்.

பாந்தண்முடிமீது.........................நடமாடு:-

கண்ணபிரான் காளிங்கன் என்ற அரவத்தையடக்கி, அதனால் மக்களுக்குக் கொடுமையுண்டாகாதவண்ணம் ஒடுக்கி அதன் மகுடத்தின் மீது பாதமலர் வைத்து நடனம் ஆடியருளினார்.

மனம் என்ற பாம்பு ஐம்புலன்களின் வழியே நஞ்சைக் கக்குகின்றது. எனவே ஐம்புலன்களாகிய படங்களை விரித்து